நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆங்காங்கே சண்டை சலசலப்புகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் தேர்தலில் தோற்ற வேட்பாளர்கள் கொடுத்த பணத்தை திருப்பி வாங்க மஞ்சள் பையோடு சென்றனர். பலர் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். ஒரு வார்டில் தோற்ற அதிமுக வேட்பாளர் ஒரு பெண்ணை தாக்கியதாக வழக்கும் பதிவாகி உள்ளது. மற்றொரு பக்கம் தோல்வி என்பது வெற்றிக்கு முதல்படி என்பதை போல துவண்டுவிடாமல் வாக்களித்த வாக்களிக்காத வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறி வருகிறார்கள் வேட்பாளர்கள்.
இப்படியான நிலையில் தான் அறந்தாங்கி நகராட்சியில் 18வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட விசாலாட்சி அதிமுக வேட்பாளர் மங்கையர்கரசியிடம் 57 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டார். இருந்த போதிலும் தனது வார்டில் உள்ள 200 வீடுகளுக்கும் இன்று நேரில் சென்று நன்றி சொன்னதோடு அவர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள டிராவல் பேக்கை பரிசாக வழங்கியுள்ளார்.
தேர்தலில் வாக்கு சேகரிக்க வாகனப் பிரச்சாரம் செய்தது போல முன்னால் ஒரு வாகனத்தில் நன்றி சொல்ல வருகிறார் என்று விளம்பர வாகனம் செல்ல பின்னால் ஆதரவாளர்களுடன் வந்து பரிசுப் பொருளை வழங்கிச் சென்றார்.
“நான் வெற்றிவாய்ப்பை இழந்தாலும் கூட தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவேன். கழக ஆட்சியில் கிடைக்கும் நலப்பணிகளை கொண்டு வந்து செய்வேன்” என்றார். இதே அறந்தாங்கியில் தான் தோல்வியடைந்த இரு திமுக பெண் வேட்பாளர்கள் திமுக பொறுப்பாளர்களால் தான் தாங்கள் தோற்றோம் அதனால் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் ஆதரவாளர்களுடன் கலைஞர் படிப்பகத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.