ADVERTISEMENT

'தமிழ் பாரம்பரியம், கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்துவேன்' -செம்மொழி புதிய இயக்குனர்

07:50 PM Jun 03, 2020 | kalaimohan



"உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்" என கூறியிருக்கிறார் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புதிதாக இயக்குனராக பொறுப்பேற்கப் போகும் பேராசிரியர் சந்திரசேகரன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சென்ற 13 ஆண்டுகளாக இயக்குநர் பணியிடம் காலியாகவே இருந்தது. இதன் காரணமாக இந்திய அளவில் தமிழ் மொழியில் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் பல தாமதம் ஏற்பட்டது. இயக்குநர் பணியிடத்தை நிரப்பக்கோரி தமிழக அரசு மத்திய அரசை கேட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திரு. ஆர்.சந்திரசேகரன் தற்போது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முமுநேர இயக்குநரகாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தமிழ்ச்சங்கம், பழங்குடிகள், சங்ககால இலக்கியத்தில் தமிழ் மொழி என பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதில் பி.ஹெச்டி பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், தமிழ்வழி நூல்களை பல்வேறு தலைப்புகளில் எழுதி வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரின் விருதுகளைப் பெற்றுள்ளதோடு, தேசிய மற்றும் மாநில அளவில் தமிழ் மொழியில் சிறந்து பணியாற்றியதற்கான விருதுதையும் பெற்றுள்ளார். அதேபோல் இந்தியா உள்பட வெளிநாடுகளில் தமிழ் மொழி குறித்த சிறப்பு சொற்பொழிவு நடத்தி தமிழ்மொழிக்கு பெருமையும் சேர்த்துள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழ்ப்பேராசிரியர் சந்திரசேகரனின் சொந்த ஊர் ஈரோடு.


ஈரோட்டில் உள்ள மூலப்பாளையம் நேதாஜிநகர் என்ற இடத்தில் வசிக்கிறார். இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சந்திரசேகரன் ஈரோட்டில் அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது,

"தமிழக முதல்வர் தலைமையில் செயல்பட்டு வரும் அமைப்பிற்கு இயக்குநராக பொறுப்பு ஏற்றிருப்பது எனக்கு பெருமை அளிக்கக்கூடியதாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அதிகரிக்கச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடுவேன். மேலும் தமிழ்மொழியில் தொய்வு ஏற்பட்டுள்ள ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதிகளை பெற்றுத் தந்து தமிழ்ப்பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த முயற்சி எடுப்பேன், அதேபோல் உலகம் முழுவதும் தமிழ்வழி கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தி உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழ் சமூகத்திற்கு, வருங்கால தலைமுறையினருக்கு தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், தன்னாட்சி நிறுவனமாக செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் மூலம் தமிழ்மொழியின் பாரம்பர்யம், கலாச்சாரத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதற்குரிய முயற்சிகளும் எடுப்பேன்" என கூறினார்.

மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஈரோட்டை சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் சந்திரசேகரனுக்கு தமிழகம் முழுவதுமிருந்து கல்வியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT