“I will break the pen statue! ” - Seaman

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு வங்கக்கடலில் பேனா நினைவு சின்னத்தை எழுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கலைஞரின் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தொலைவில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா சின்னத்தை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு செல்ல நினைவிடத்தில் இருந்து கடலில் பாலம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதற்கான மாதிரி படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான போதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

இந்நிலையில், கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று (ஜனவரி 31) நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து இருந்தது.

Advertisment

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், “பேனா சிலையை வைக்க குறிப்பிட்ட பகுதியை கடலில் இருந்து எடுக்கிறீர்கள். அதை சமன்செய்ய மண்ணை கொட்டுவீர்கள். இதனால் அழுத்தம் வந்து பவளப் பாறைகள் பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார். அப்போது அங்கிருந்த சிலர் சீமானின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

உடனே, “உங்களை மெரினாவில் புதைக்க விட்டதே தவறு. நீங்கள் பேனா சிலையை வையுங்கள். ஒருநாள் நான் வந்து அதை உடைக்கிறேனா, இல்லையா எனப் பாருங்கள். கடலுக்குள் தான் பேனா வைக்க வேண்டுமா? பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருது? ஏன் அண்ணா அறிவாலயத்தின் முன்பு வையுங்கள். இல்லையெனில் நினைவிடம் கட்டியுள்ளீர்களே அதில் வையுங்கள். 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்” என்றார்.

உடனே சீமான் வெளியேறுமாறு சிலர் கூச்சலிட்டனர். அதற்கு, “நீங்கள் போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் கடலுக்குள் பேனா வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். கடுமையான போராட்டங்கள் நடத்துவோம். அதை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன். இது உறுதி” என்று தனது பேச்சை முடித்து கொண்டு சீமான் புறப்பட்டு சென்றார்.