Advertisment

அரசியலில் அடக்கமும் பக்குவமும் இல்லாத தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் -பாமக தலைவர் ஜி.கே.மணி

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியலில் பக்குவமும் அடக்கமும் இல்லாமல் கருத்துக்களை தெரிவித்துவருகிறார் எனவே அவர் பாமகவிடமும்,அன்புமணி ராமதாஸிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

pmk

அரசியலுக்கும், சமூக சேவைக்கும் தேவையான அடக்கமும், பக்குவமும் இல்லாமல் கருத்து என்ற பெயரில் கத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் வித்தியாசமாக கத்தியிருக்கிறார். அது பெரும்பான்மை சமுதாயத்தின் செவிகளை கிழித்து மனங்களை காயப்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் தனியார்தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய தமிழிசை சவுந்தரராஜனிடம் சென்னை- சேலம் பசுமை சாலைக்கு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து வினா எழுப்பப்பட்டது. அதற்கு வழக்கம் போலவே மக்களை சமூக விரோதிகளாக அவர் சித்தரித்துக் கொண்டிருந்தார். அடுத்து, ஏற்கனவே சேலத்திற்கு செல்ல இரு சாலைகள் உள்ள நிலையில், இத்திட்டம் தேவையா என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேட்டிருக்கிறாரே? என செய்தியாளர் வினா எழுப்பியபோது அதற்கான பதில் தமிழிசையிடம் இல்லை. அதனால் அகங்காரத்துடன் குரூர சிரிப்பை வெளிப்படுத்தி விட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கடைநிலையில் இருந்த பாட்டாளி மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு மருத்துவர் அய்யா தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் சில கருத்துக்களை உதிர்த்து திருப்தியடைந்திருக்கிறார். தமிழிசை சவுந்தரராஜனின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது; இது அவரை அடையாளப்படுத்தியுள்ளது.

Advertisment

சில நேரங்களில் காற்று செய்யும் தவறுகளால் மேலே அடித்துச் செல்லப்படும் பொருட்களில் சில தங்களுக்கு இறகு முளைத்து விட்டதாகவும், தாங்கள் பறந்து கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து கொள்வது வழக்கம். அந்த நேரத்தில் அவர்களுக்கு தாங்கள் யார்? என்பதும், மற்றவர்களின் மதிப்பு என்ன? என்பதும் மறந்து போயிருக்கும். காற்றின் வேகத்தில் தாங்கள் ஏற்கனவே இருந்த இடத்தை விட மோசமான இடத்தில் வீசியடிக்கப்படும் போது தான் அவற்றுக்கு தங்களைப் பற்றிய நினைவுகள் வரும். அதேபோன்று பறப்பதாக நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் தமிழிசை சவுந்தரராஜன் வெறுப்பு வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். ‘‘அய்யோ பாவம் தமிழிசை... அவருக்கு வரலாறு தெரியாது. விட்டுத்தள்ளுங்கள்’’ என்று மருத்துவர் அய்யா அவர்கள் கூறிவிட்ட போதிலும் கூட, அதை ஏற்றுக் கொள்ள பாட்டாளி மக்கள் தயாராக இல்லை. சமூக நீதிக்காக தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயம் நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கொந்தளித்துக் கொண்டுள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜனுக்கு அறிவும், அனுபவமும் அவ்வளவாக போதாது. அதனால் தான் 1987&ஆம் ஆண்டில் நடைபெற்ற சமூகநீதிப் போராட்டத்தின் மகத்துவம் அவருக்கு புரியவில்லை. அது ஒரு தியாக வரலாறு. அந்த வரலாற்றின் கதாநாயகர் மருத்துவர் அய்யா. சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பதைப் போல, சமூக நீதியும் சும்மா கிடைத்துவிடவில்லை. 21 உயிர்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்து, மருத்துவர் அய்யா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சிறை தண்டனைகளை அனுபவித்து அதன்பயனாகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் உரிமைக்காக போராடுவோரை எல்லாம், யாரோ சொல்லிக்கொடுத்தவாறு, சமூக விரோதிகள் என்று கிளிப்பிள்ளை போன்று கூறும் தமிழிசை சமூக நீதிப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியிருப்பதை பெரும்பான்மை சமுதாய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மருத்துவர் அய்யா சாதிக்காக மட்டும் போராடும் வழக்கம் கொண்டவர் அல்ல. எந்த சமூகம் பாதிக்கப்பட்டாலும் அதற்கான முதல் குரல் மருத்துவர் அய்யா அவர்களிடமிருந்து தான் வெளிப்படும். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழிசை சவுந்தரராஜன் சார்ந்த சமூகத்தினரைப் பற்றி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் எட்டாம் வகுப்பு புத்தகத்தில் இழிவாக பதிவு செட்டப்பட்டிருந்ததை அறிந்த மருத்துவர் அய்யா தான், முதன்முதலில் மத்திய இடைநிலைகல்வி வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தமது செலவில் சட்டப்போராட்டம் நடத்தி அந்தசமுதாயம் குறித்து பாடப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இழிவான கருத்துக்களை நீக்க வைத்தார். அதற்காக சிலஅமைப்புகள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பாராட்டு விழா நடத்திய போது, அதை தடுக்க முயன்று தோற்றுப் போனவர் தான் தமிழிசை. அவரது சிந்தனை எவ்வளவு கோனலானது என்பதற்கு இதுவே சாட்சி.

108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக மருத்துவர் அய்யா அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யும்வரை தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக பாட்டாளி மக்களின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனக்கூறியுள்ளார்.

pmk ramdoss Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe