Skip to main content

“சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயனடையக் கேட்டுக் கொள்கிறேன்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

I urge you to invest in savings schemes and benefit Minister Thangam Thanarasu

 

தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

 

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகச் சிக்கன நாள் அக்டோபர் 30.10.2023 அன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுவதைக் குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் 1985 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, சிக்கனமாக வாழ்ந்து, சேமிப்பையும் மேற்கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

 

‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ என்று அய்யன் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். ஒருவன் தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாவிடில் அவன் வாழ்க்கை, செல்வம் இருப்பது போலத் தோன்றினாலும் செல்வம் இழந்து வாழ்க்கை கெடும். எனவே சிக்கனமும் சேமிப்பும் மிக அவசியம். அந்த வகையில், சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன. இவை சேமிப்பவர்களின் குடும்பத்திற்குத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், எதிர்பாராச் செலவுகளை எதிர்கொள்வதற்கும் பயன்படுகின்றன.

 

மக்கள் தங்களது சேமிப்புத் தொகையைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப்பெற முடியும். இந்த வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை. ‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்’ என்னும் பொன்மொழிக்கேற்ப, பள்ளிச் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலும், விவசாயிகள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். தனியார் நிறுவன ஊழியர்கள், சுய தொழில் புரிவோர், மகளிர் போன்ற அனைவரும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 எலான் மஸ்க்கின் வருகை திடீர் ஒத்திவைப்பு!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Elon Musk's visit is suddenly canceled!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதனிடையே, எலான் மஸ்க் நாளை (21-04-24) இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர், இந்தியாவில் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்த பயணம் திடீரென ரத்தாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இந்தியாவிற்கு வருகை புரிவதை தாமதப்படுத்த்தியுள்ளன. ஆனால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

துரை வைகோ சொன்ன குட்டி ஸ்டோரி; விருதுநகர் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 The short story told by Durai Vaiko; the minister answered on the stage!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அமைந்துள்ளது விஸ்வநத்தம் கிராமம். இப்பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாகப் பயனற்று நில மாசுபாட்டை ஏற்படுத்தி வந்தது. இதையறிந்த விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், குப்பை மேடாகப் பயனற்றுக் கிடந்த அரசு நிலத்தை மீட்டு குறுங்காடு அமைக்கத் திட்டமிட்டனர். விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அன்றாடம் வேலை செய்யும் எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி அரசிடம் அனுமதி கேட்டு பணிகளைத் துவங்க வேண்டும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்துள்ளது. 

இந்த நிலையில் தான், விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் பணியைப் பார்த்து பாராட்டிவிட்டு தனிப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்துவிட்டுச் சென்ற மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் ஞாபகம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. உடனே அவர்கள் செல்போனில் தகவல் தெரிவித்து குறுங்காடுகள் அமைக்க உதவி கேட்க, பணிகள் தொடங்க அனைத்து உதவிகளையும் துரை வைகோ ஃபோன் மூலமே செய்து கொடுத்துள்ளார். செல்போனில் குறுங்காடு அமைக்கும் குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்த துரை வைகோ, உடனே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் கொடுக்க அமைச்சரும் தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, குறுங்காடு அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஊராட்சி தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தார். 

இந்த கூட்டு முயற்சியால் முதற்கட்டமாக விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மரக் கன்றுகளை நட்டு நிகழ்வினை சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக குறுங்காட்டிற்கு 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட  முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக LED திரையில் திரையிடப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய  துரை வைகோ, 'விதைப்பது ஒரு முறை வாழட்டும் தலைமுறை' குறுங்காடு திட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, குறுங்காட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டு மரங்கள் நட இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 14 மாதங்களில் தான் கொடுத்த வாக்கை செய்து காட்டிய பின்னணியை தனது கட்சியின் தலைவரும் தந்தையுமான வைகோவை முன்னிறுத்தி திருக்குறளுடன் ஒப்பிட்டுப் பேசினார். மேடையில், அண்ணன் தங்கம் தென்னரசு என அழைத்து, இருவருக்கும் 2 தலைமுறையாக இருக்கும் உறவு பந்தத்தை எடுத்துக்காட்டி பேசினார். தொடர்ந்து பேசியவர், ''நான் நல்லா இருக்கணும் என எப்போதும் நினைக்கிறது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அமைச்சர் தங்கம் தென்னரசு..'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து உணர்வுப்பூர்வமாக பேசிய  துரை வைகோ, குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நிகழ்ச்சிக்கு நேரம் வாங்க சென்றதாகவும், அப்போது அன்புடன் பேசிய அமைச்சர், ''உங்க அப்பா தான் புலி புலினு இருந்தார்னா.. நீ மரம் செடி கொடின்னு இருக்கியே.. சீட்டு வாங்கி அரசியல் வேலை பாரு..'' என அன்புடன் கடிந்துகொண்டதாகவும், அதற்கு ''நான் இல்லாத காலத்திலும் இதை அமைத்துத் தந்தவன் வைகோ மகன். அவனது கட்சி என்பார்கள். அதுவே போதும். இந்த 32 ஏக்கர் குறுங்காடு எனது சின்ன உதவி..'' என சொல்லியதாக எல்லோர் மத்தியிலும் இருவருக்குள் நடந்த நிகழ்வை கூறினார். 

நிகழ்வில் இருந்த பத்திரிகையாளர்களை குறிப்பிட்டு பேசியவர், ''தான் அரசியலில் போட்டியிட இங்கு வரவில்லை..'' எனத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து தனது உரையின் முடிவில் பேசியவர், தமிழக அரசின் பசுமைத் திட்டம் பற்றியும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் விஸ்வ வனம் அமைப்பை பற்றியும் பெருமிதத்துடன் பேசினார். இறுதி வரியாக, ''உங்களுக்கு ஊர் பிடிக்கலன்னா வேற ஊர் போய்டலாம். மாநிலம், நாடு புடிக்கலன்னா வேற இடம் போயிடலாம். ஆனா நம்ம பூமித்தாய விட்டு நம்ம எங்கேயும் போக முடியாது. ஒன்று சேர்ந்து பூமியை பாதுகாப்போம்..'' என சூளுரைத்து தனது உரையை துரை வைகோ முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான். அவர் தற்போது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார். வைகோவிடம், `உங்களுக்கு பின்பு இந்தக் கட்சியை வழி நடத்த ஒரு ஆள் தேவை. அதற்கு துரை வைகோ பொருத்தமானவர். அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்..’ எனக் கூறி அரசியலுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டி பேசினார். இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைப்பதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.