
கரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான் மற்றும் கரோனா பரவலையொட்டி, சில நாடுகள் மக்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசனையைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், நேற்று முதல் முன்களப் பணியாளர்கள், 60 வயதை தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டினப்பாக்கத்தில் நேற்று துவங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செலுத்திக்கொண்டார். இதுகுறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!' எனத் தெரிவித்துள்ளார்.