Skip to main content

"பெரியப்பா பெயரை சொன்னால் அப்பா என் தலையில் அடிப்பார்..." - பிரபு பகிர்ந்த நினைவுகள்

Published on 28/08/2018 | Edited on 28/08/2018

கலைஞரின் மறைவிற்காக பத்திரிகைத்துறை, இலக்கியத்துறை, கலைத்துறை என்று அனைவரும் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் சினிமாத்துறையினர் கோயம்புத்தூரில் பங்கேற்ற 'மறக்க முடியுமா கலைஞரை' நிகழ்ச்சியில் 'இளைய திலகம் பிரபு' கலைஞரை பார்ப்பதற்காக ஸ்கூலை கட் அடித்துவிட்டு சென்ற நினைவுகளையும், மேலும் அவருடன் 'சாம்பார் வடை' சாப்பிட்டதை பற்றியும் பகிர்ந்துகொண்டார். 

 

kalaignar

 

பெரியப்பா டாக்டர் கலைஞர் அவர்களை சந்தித்தேன் இரசித்தேன். எனக்கு மிகவும் பிரியமான அப்பாவாக கலைஞர் பெரியப்பா இருந்தார். சின்ன வயசில் பெரியப்பா பெயரை சொன்னால், என் அப்பா என் தலையிலே அடிப்பார். 'ஏன்டா அவர் என்ன உன் கூட படிச்சவரா? பெரியப்பானு கூப்பிட்றா' என்று சொல்லுவார். அப்படித்தான் சிறு வயது முதலே அவரை பெரியப்பா என்று சொல்லி பழக்கப்பட்டேன். அதுக்குப் பிறகு பெங்களூரில் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு முறை சந்தித்தேன். அங்குதான் பெரியப்பா அடிக்கடி தங்குவார். அவர் பெங்களூருவுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், நான்  'ஸ்கூலை கட்' அடிச்சுட்டு அவரை பார்க்க சென்றேன். கழகத் தோழர்கள் எல்லாம் கிளம்பிவிட்டார்கள். அப்பாவின் உதவியாளர் மட்டும் உடன் இருந்தார், நான் மேலே சென்று அப்பாவை சந்திக்க வேண்டுமென்று கேட்டேன். 'சார் ஓய்வு எடுத்துட்டு இருக்கிறார்' என்றார் உதவியாளர். 'எனக்காகக் கொஞ்சம் சொல்லுங்களேன் நான் ஸ்கூலை எல்லாம் கட் அடிச்சுட்டு வந்திருக்கேன்' என்றேன். உள்ள போய் விவரத்தை சொன்னாங்க, ரெண்டே செகண்ட்தான் கதவு திறந்தது 'ஏய் பிரபு, உள்ளே வாப்பா' என்று கையை பிடித்து அழைத்து சென்றார். உள்ளே சென்றதும் பக்கத்தில் உக்காரு என்றார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு கீழே தரையில் உட்காந்துக் கொண்டேன். 'இங்க என்னய்யா பண்ற' என்றார். 'நாங்கல்லாம் இங்கேதானே அப்பா, படிக்கிறோம்' என்றேன். 'ஆமாம், என் நண்பன் கணேசன் பசங்கள்லாம் பெங்களூரில்தான் படிக்கிறாங்கனு கேள்விப்பட்டு இருக்கிறேன்' என்றார். எப்போதுமே நண்பன் என்பதை விட்டுக்கொடுக்காமல் பேசுவார். பிறகு 'இந்த உட்லன்ட்ஸ் ஹோட்டலில் சாம்பார் வடை  நல்லா இருக்கும் என்று சொல்லி, அதை சாப்பிட வைத்து பின்னர் 'ஸ்கூலை கட் அடிச்சுட்டு வந்திருக்க அதனால் நீ புறப்படு' என்றார்.   

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா பாடல்கள் நம்மை ஆட்டிப்படைக்கும்” - குஷ்பு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
kushboo about ilaiyaraaja

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. பாலு தயாரித்திருந்த இப்படத்தில் மனோரோமா, ராதா ரவி, கவுணடமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வாசுவின் மகன் சக்தியும் சின்ன வயது பிரபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்களுக்கு வாலி மற்றும் கங்கை அமரன் வரிகள் எழுதியிருந்தனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் கன்னடம், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் தமிழில் வெளியான அதே ஆண்டில் ராமச்சாரி என்ற தலைப்பில் வெளியான நிலையில் ரவிச்சந்திரன் மற்றும் மாலாஸ்ரீ நடித்திருந்தனர். தெலுங்கில் சண்டி என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான நிலையில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இந்தியில் அனாரி என்ற தலைப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான நிலையில் தெலுங்கில் நடித்த வெங்கடேஷ் மற்றும் கரிஸ்மா கபூர் நடித்திருந்தனர்.  

கன்னடம் மற்றும் தெலுங்கில் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தியில் முரளி மோகன ராவ் இயக்கியிருந்தார். இசையில் தமிழை தவிர்த்து தெலுங்கில் மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.   இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி நடிகை குஷ்பு, படம் குறித்து நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நேரம் பறக்கிறது எனச் சொல்வார்கள், அது உண்மைதான். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட சின்னதம்பி இன்றுடன் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. அந்தப் படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. 

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பி.வாசு சார் மற்றும் எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு சார். மறைந்த கே.பாலு தயாரிப்பாளர் எப்போதும் நினைவில் இருப்பார். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், என்னுடன் நடித்த துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இறுதியாக மெஜிசியன் இளையராஜா, அவரது பாடல்கள் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார்.