publive-image

சென்னை பழவந்தாங்கல் கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி ஊர்வலத்தின் போது அருகில் உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

Advertisment

அப்போது 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். பழவந்தாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதோடு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாமி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலின் தீர்த்தவாரி திருவிழாவின்போது நடைபெற்ற விபத்தில், 5 பேர் உயிர் இழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கியபோது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது.

திருவிழாக்களின் போது, மக்களுக்கு காவல்துறையினர் இனிமேல் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக அரசு கொடுக்கும் 2 லட்சம் ரூபாயை5 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மறைந்தவர்கள் அனைவரும் ஆன்ம அமைதி பெறவும், அவர்களின் குடும்பத்திற்கு மன ஆறுதலைத் தரவும் இறைவனை வணங்கி வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.