I. Periyasamy said that he will create a graduate student for every household

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட சுதனாகியபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஏற்பாட்டின்படி கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்பட்டது. இக்கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டும் வரை மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் கூட்டுறவுத்துறை கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. 2022ம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் முதலாமாண்டில் 253 மாணவர்களும், 2ம் ஆண்டில்(2023) தற்போது 296 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

Advertisment

இக்கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவுகளில் வரலாறு, கூட்டுறவு, பொருளியல், தமிழ், வணிகவியல், கணினியியல் (பி.காம்.சிஏ), வணிக மேலாண்மை படிப்பிற்கான வகுப்புகள் உள்ளன. கல்லூரியைத்தொடங்கி வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மாணவர்களுக்கான கல்லூரி கட்டணத்தை செலுத்தி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதனைத்தொடர்ந்து 2023 ஆம் வருடம் மாணவர் சேர்க்கையின் போதும் கல்விக் கட்டணம் செலுத்தியதோடு முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பருவத்தேர்வு கட்டணத்தையும் மாணவர்கள் நலன் கருதி செலுத்தி வருகிறார். இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து கல்லூரி துணை முதல்வர் பழனிக்குமார் கூறுகையில், “கல்லூரி தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் கல்லூரியின் வளர்ச்சியில் அமைச்சர் ஐ. பெரியசாமி அக்கறையோடு செயல்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் அமையாத அளவிற்கு ரூ.98 கோடி மதிப்பில் கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி நவீன வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. கல்லூரியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தகவல் தொழில்நுட்பக் கல்வி, கணிப்பொறி அறிவியலுக்கான பாடப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன” என்றார்.

இது சம்பந்தமாக எஸ்.பாறைப்பட்டிகிராமத்தைச் சேர்ந்த மாணவன் சசி கூறுகையில், “ஆத்தூர் தொகுதியில் உள்ள மாணவர்களாகிய நாங்கள் அமைச்சர் ஐ. பெரியசாமியை எங்களின் கல்விக் கண்ணை திறந்த காவல் தெய்வமாகத்தான் பார்க்கிறோம். குறிப்பாக எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தியதோடு தற்போது கல்லூரியையும் கொண்டு வந்து எங்களை உயர்கல்வி கற்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி கல்விக் கட்டணம்மற்றும் பருவத் தேர்விற்கான கட்டணங்களைக் கட்டி எங்களின் பெற்றோர்களின் சுமைகளை குறைத்துள்ளார். வாழ்நாள் உள்ளவரை அவரை மறக்க முடியாத அளவிற்கு எங்கள் தொகுதியில் பல மாணவர்களை உயர் கல்வி கற்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். மாணவர்கள் சமுதாயம் என்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “ஒரு குடும்பத்தில் ஒருவர் உயர்கல்வி கற்றாலே அந்த குடும்பத்தின் வாழ்வாதாரம் முன்னேறிவிடும் 1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 34 ஆண்டுகள் ஆத்தூர் தொகுதியில் மக்களோடு மக்களாக இருந்து வருகிறேன். கிராம ஊராட்சியில் உள்ள மக்களின் பொதுவான சிரமங்கள் எனக்கு தெரியும். வாழ்வாதாரத்தில் அடித்தட்டில் இருக்கும் அவர்களை உயர்த்த வேண்டும் என்றால் அந்த குடும்பத்திலிருந்து ஒருவராவது உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க. ஸ்டாலின் ஆதரவோடு ஆத்தூர் தொகுதியில் இரண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்தேன். இப்போது இப்பகுதியை சேர்ந்த பலமாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள்.

மேலும் இப்பகுதியில் பூ விவசாயம் அதிகம், பூ பறிக்கும் தொழிலில் அதிகாலை நேரங்களில் பெண் மாணவியர்கள்தான் அதில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் சிரமமின்றி தங்கள் கிராமம் அருகே உள்ள கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டதுதான் இந்த கூட்டுறவுத்துறை சார்பாக நடத்தப்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. முதலாம் ஆண்டிலேயே மாணவர்கள் எண்ணிக்கை என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது. தற்போது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையின்போது சென்ற ஆண்டை விட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம் ஆத்தூர் தொகுதியில் வீட்டுக்கு ஒருவராவது பட்டப்படிப்பு படித்த மாணவர்களை உருவாக்குவதுதான் எனது முதல் கடமை” என்று கூறினார்.