தமிழ் நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைத் தமிழகம் முழுவதும் திமுகவினர் வெகுமிமர்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதைதொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த 19 குழந்தைகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்தார். மேலும் பிரட், பழம் மற்றும் மருந்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார். இன்று இரவு 12 மணி வரை பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படவும் உள்ளது. இதில் மாநகர மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன், ஒன்றிய செயலாளர்களான நெடுஞ்செழியன், வெள்ளிமலை பகுதி செயலாளர்களான ராஜேந்திர குமார், ஜானகி ராமன், அக்கு உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அதேபோல் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திண்டுக்கல் - நத்தம் சாலையில் தோட்டனூத்து பிரிவில் 60 அடி உயரத்தில் திமுக கொடியை தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை ஏற்றினார். மேலும் தூய்மை பணியாளர்கள், திருநங்கைகள், மேல்நிலைத் தொட்டி ஆப்ரேட்டர்கள் என 400 க்கும் மேற்பட்டோருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான குடை, போர்வை, இனிப்பு சில்வர் பாத்திரம் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அதேபோல் 39 ஆவது வார்டுக்கு உட்பட்ட பேகம்பூரில் உள்ள டி.பி.கே.என் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள 900 மாணவ மாணவிகளுக்கு உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி சில்வர் டிபன் பாக்ஸ் மற்றும் கம்பு, சோளம், கேழ்வரகு, எள் போன்ற சத்து பொருட்கள் நிறைந்த சத்து உருண்டை வழங்கினார். மேலும் மாணவர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாட்டு பாடி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் கட்சியின் பகுதி செயலாளர் ராஜேந்திர குமார் மற்றும் மேற்கு பகுதி செயலாளர் பஜுலுக்ஹக் ஏற்பாட்டின்படி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பி. துவக்கி வைத்தார். அதன் பின் பத்திரிகையாளரிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு திமுகவினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் இன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.