Skip to main content

“உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
i Periyasamy has said that steps will be taken to get the women's due amount.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 

அதன் பின் இந்த விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தை தொழில்துறையில் மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்பத்தலைவிகள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் 1.16 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

i Periyasamy has said that steps will be taken to get the women's due amount.

பெண்கள் உயர்கல்வி பயில்வதை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 18 இலட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் அடிப்படைக்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சுகாதாரமான, காற்றோட்டமான வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதியோர் உதவித்தொகை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது. முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு தகுதியிருப்பின் அவர்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் சுயமாக குடியிருப்புகள் கட்டி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக வீடு கட்டி வழங்கும் திட்டம், இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. 

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி வழங்கவும், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை பழுது பார்க்கவும் புதிய திட்டம் அறிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில், மக்களுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்குச் சென்று சேரும் வண்ணம் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என அரசின் திட்டங்களின் பயன்களை பொது மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வீரக்கல் ஊராட்சி, கும்மம்பட்டியில் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், வடக்கு மேட்டுப் பட்டியில் ரூ.8.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், வீரக்கல்லில் ரூ.18.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பால் சேகரிப்பு நிலை யம் மற்றும் ரூ.11.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், அக்கரைப்பட்டி ஊராட்சி, மல்லையாபுரத்தில் ரூ.13.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், சீவல்சரகு ஊராட்சி, பழைய கோடாங்கிபட்டியில் ரூ.5.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், ஜெ.புதுக்கோட்டையில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வேலக்கவுண்டன்பட்டியில் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என மொத்தம் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டப்பணிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்காக, உங்களுக்காக அயராது உழைத்துக்கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்