சேலத்தில் புதன்கிழமை பிடிபட்ட பிரபல திருடன், எப்பேர்பட்ட பூட்டையும் திறந்து விடுவேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்தவர் அங்கமுத்து (65). செவ்வாய்க்கிழமை (பிப். 25) வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். புதன்கிழமை அவர் வீடு திரும்பினார். வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 I open the lock quietly salem police

Advertisment

இந்நிலையில், புதன்கிழமை மதியம் 3 மணியளவில், சேலம் சூரமங்கலம் ரயில்நிலையம் அருகில், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், விழுப்புரத்தைச் சேர்ந்த அருங்குணம் மகன் சங்கர் என்கிற ஜெய்சங்கர் (39) என்பதும், அவர்தான் அங்கமுத்து வீட்டில் நகைகளை திருடியவர் என்பதும் தெரிய வந்தது.

Advertisment

இதையடுத்து அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் நடந்த மற்றொரு திருட்டு சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

கோட்டகவுண்டன்பட்டி மேகநாதன் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து திருடிய 2.25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருள்களையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. வீடுகளில் பூட்டை நெம்பி திறப்பதற்கு பயன்படுத்திய இரும்பு ராடுகள், கடப்பாரை, ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 I open the lock quietly salem police

இதுகுறித்து திருடன் சங்கர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''திண்டுக்கல் பூட்டு முதல் வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட பூட்டு வரை எந்த வகையான பூட்டாக இருந்தாலும் யாருக்கும் சத்தம் கேட்காத வகையில் இரும்பு ராடு, ஸ்க்ரூ டிரைவர் மூலம் திறந்து விடுவேன்,'' என்று கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் அவர் மீது 30- க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், கடந்த ஆண்டு ஒரு குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.