Skip to main content

அதிமுகவுடன் இனி ஒருபோதும் தேர்தல் கூட்டணி கிடையாது -  வேல்முருகன் பேட்டி

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
velmurugan

 

மத்திய பாஜக அரசிடம் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்ட அதிமுகவுடன் இனி ஒருபோதும் தேர்தல் கூட்டணி கிடையாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் கூறினார்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சேலத்தில் நேற்று (செப். 17, 2108) நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் சேலம் வந்திருந்தார்.


முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  சென்னையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ஹெச்.ராஜா நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் மிக அநாகரிகமாக விமர்சித்துப் பேசி இருக்கிறார். மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை கைது செய்ய வேண்டும்.


ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது. அவர்களை விடுவிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் அலுவலகத்தை வரும் 26ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.


தமிழகத்தில் அமைச்சர், டிஜிபி, தலைமைச் செயலாளர் வீடுகளில் எல்லாம் சிபிஐ மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது தமி-ழகத்திற்கு மிகப்பெரும் தலைகுனிவு ஆகும். இவற்றை எல்லாம் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதற்குப் பிறகும், இந்த அரசு நீடிக்க தகுதியில்லை. அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.


பின்னர் அவரிடம், மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்று கேட்டதற்கு, ''ஊழல் செய்யும் பாஜக அரசிடம் தமிழகத்தை அடமானம் வைத்துள்ள அதிமுகவுடன் இனி கூட்டணி வைக்கப்போவதில்லை,'' என்றார்.


திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது குறித்த கேள்விக்கு, ''அதிமுக அரசின் லஞ்சம், ஊழல் அட்டூழியத்தை வழக்கறிஞர் மூலம் அவர் வெளிக்கொண்டு வந்துள்ளார். ஊழல் அரசின் மீது திமுக நடவடிக்கை எடுத்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்,'' என்றார்.

சார்ந்த செய்திகள்