/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1020.jpg)
கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான விழா மேடையில் 80,750 பயனாளிகளுக்கு ரூ. 500.83 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். இதில், ரூ.581.44 கோடி மதிப்பில் 99 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.28.60 கோடி மதிப்பில் 95 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்தும் வைத்தார்.
கரூர் மற்றும் நாமக்கலில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் நேற்று திருச்சி வந்தார். பின் திருச்சியில் இருந்து கரூருக்கு சாலை மார்க்கமாக வந்தார். கரூரில் சுற்றுலா மாளிகையில் மாவட்ட தொழில் முனைவோர்கள் உடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 80,750 பயனாளிகளுக்கு ரூ. 500.83 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், கரூர் எம்.பி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3299.jpg)
இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒவ்வொருவருக்கும் தமது மனசாட்சியே நீதிபதி என்பார்கள். அதன்படி எனது மனசாட்சிக்கு உண்மையாக ஆட்சி நடத்துகிறேன். ஓராண்டு கால ஆட்சி மனநிறைவைத் தருகிறது. மக்களிடம் இருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற எப்போதும் தயார். என்னை விமர்சிப்பதன் மூலம் பிரபலமடையலாம் என்று தினந்தோறும் ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பமுமில்லை, நேரமுமில்லை.
மக்களுக்கான திட்டங்கள் பற்றி சிந்திக்கவே, செயலாற்றவே நேரம் போதவில்லை. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். ஆனால், மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவருடன் போராடுவது சிரமமான காரியம் என்று பெரியார் சொல்வார். எனவே, வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுடைய முகத்தில் தென்படும் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தான் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கான சாட்சி. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தொழில் வளர்ச்சியில் போட்டி இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்தால் தான் தமிழ்நாடு வளரும். கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டத்தை விட தொழில் வளர்ச்சியில் வளர வேண்டும்” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)