முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிக்கையின்ஆசிரியருமானஇருந்த முரசொலி செல்வம் (82) உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கலைஞரின் மகள் செல்வியின் கணவரான செல்வம் முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார். திமுகவின் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி முரசொலி நாளிதழை மேம்படுத்தியவர். முரசொலி செல்வத்துடைய மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'திமுகவின் கொள்கை செல்வம் மறைந்தார். நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை, கொள்கை தூணை இழந்து நிற்கிறேன். முரசொலி ஆசிரியராக பொறுப்பேற்று தன் எழுத்துக்களால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர். 'சிலந்தி' என்ற பெயரில் முரசொலியில் நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகளை எழுதியவர். அதிர்ந்து பேசாதவர்; ஆழமான கொள்கைவாதி; நெருக்கடி காலங்களில் தெளிவான தீர்வை தந்தவர். கட்டுரைகள் மூலம் இளைய தலைமுறைக்கு கொள்கை ரத்தம் பாய்ச்சிய செல்வம் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கேட்டு இதயம் அதிர்ந்து நொறுங்கி விட்டேன்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'திமுகவில் விசுவாசம் மிக்க, கடமையை மீது நம்பிக்கை கொண்டவர் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்' என இரங்கல் தெரிவித்துள்ளார்.