Advertisment

“எனக்கு பக்கபலமாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படித்த மகன்களும், மகள்களும் இருக்கிறார்கள்” - சைதை துரைசாமி உருக்கம்

I have IAS and IPS educated sons and daughters by my side Saidai Duraisamy

இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை மத்தியப் பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் மூலம் தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனையடுத்து 8 நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்று முன்தினம் (12.02.2024) மீட்கப்பட்டது. அதன் பின்னர் வெற்றி துரைசாமியின் உடல் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து நேற்று (13.02.2024) சென்னை கொண்டு வரப்பட்டு சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைகோ, அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், வி.கே. சசிகலா, கே. பாலகிருஷ்ணன், சீமான், அன்புமணி ராமதாஸ், முத்தரசன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் தியாகராயநகரில் உள்ள மயானத்தில் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், தனது மகன் வெற்றி துரைசாமியை மயானத்தில் தகனம் செய்த பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசுப் பணியில், அரசின் உயர் பதவியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற உயர் பதவிகளில் பணிபுரிகின்ற வாய்ப்பை பெற்ற அனைத்து மகன்களும், மகள்களும் இங்கு வந்துள்ளனர். என்னுடைய ஒரு மகன் போனாலும் எனக்கு பக்கபலமாக (கண்ணீருடன் அழுது கொண்டே) என்னுடைய இத்தனை மகன்கள், மகள்கள் இருக்கின்றார்கள் என்ற மனவலிமையோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

I have IAS and IPS educated sons and daughters by my side Saidai Duraisamy

சக மனிதனுக்காக வாழ வேண்டும். சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு விடக் கூடாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட 259 சமூகத்தில் 170 சமூகத்தை சேர்ந்தவர்களை அரசு பதவிகளில் அமர அமர வைத்துவிட்டோம். மீதம் உள்ள 89 சமூகத்தினரையும் அரசுப் பணியில் அமர வைப்பதும் எனது லட்சியம் என என்னுடைய மகன் மரணத்தில் உறுதியெடுத்துக்கொள்கிறேன். அதை நோக்கி பயணம் செய்து, சக மனிதனுக்காக வாழ்ந்து, என மகனின் ஆன்மா சாந்தியடையும் வகையில் அந்த சேவையை அபிவிருத்தி செய்வேன். எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பல்வேறு பணிகளை எல்லாம் விட்டு விட்டு இந்த நிகழ்ச்சியில் ஆறுதல் சொல்ல வந்த அனைத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளில் இருக்கிற என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும், தமிழ்நாட்டின் டி.என்.பி.எஸ்.சி மூலம் வெற்றியாளர்களாக பணிபுரிகின்ற அனைவருக்கும் என்னுடைய நன்றி. நான் மனம் கலங்க மாட்டேன். காரணம், இத்தனை மகன்களை, மகள்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆகவே நான் இன்னும் உறுதியோடு, வலிமையோடு சேவையை பிரதானப்படுத்தி, என்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்வேன் என்று உறுதியெடுத்து மகனின் இறுதி நாளில் சூளுரைத்து இந்த பாதையில் பயணிக்கிறேன்” என உருக்கத்தோடு தெரிவித்தார்.

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe