திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 101 பிறந்தநாள் இன்று திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவக வளாகத்திற்குள் புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மூத்த அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல தமிழகம் முழுவதும் திமுகவினர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டங்களை வழங்கி பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கலைஞருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,'கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் தனது அறிவார்ந்த இயல்புக்காக பரவலாக மதிக்கப்படுகிறார். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது, அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்' என தெரிவித்துள்ளார்.