பாஜகவை எதிர்ப்பதால் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலையில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசர் இல்லத்திருமண விழா விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், “பிரதமராக இருக்கக் கூடிய மோடி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்துநாட்டு மக்கள்ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் கொடுப்பதாகஉறுதியளித்தார். 15 ஆயிரம் கூட இல்லை, 15 ரூபாய் கூட மக்களுக்கு வழங்கவில்லை. இதைப் பற்றி அவர் சிந்திக்கவும் இல்லை, பேசவும் இல்லை. மாதம் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் காற்றிலேயே பறக்க விட்டுவிட்டனர்.
விவசாயிகள் நலன் காப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பாஜக டெல்லியில் விவசாயிகள் மழையிலும், வெயிலிலும் போராடிய போது கண்டுகொள்ளாமல் இருந்தது. அதன் பிறகு வேறு வழியின்றி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. சர்வாதிகார பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் என்ற நிலையில் இருப்பதை மறந்து மோடி எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார். பாஜகவை எதிர்ப்பதால் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலையில்லை. இம்மியளவும் பயப்படாமல் கொள்கை, லட்சியத்தை மனதில் கொண்டு நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத்தயாராக இருக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர். இது, சிலருக்கு எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.