
புதுக்கோட்டையில் திமுக மூத்த உறுப்பினர்களுக்கு 'பொற்கிழி' வழங்கும் நிகழ்ச்சி தடிகொண்ட ஐயனார்கோவில் திடலில் நடந்தது. நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,051 கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ''எனக்கு பேச்சைவிட செயல்தான் பிடிக்கும். அதனால் குறைந்த அளவே பேசுவேன். என்னை திருமண நிகழ்ச்சிக்கு அழைத்தபோது மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினால் வருவேன் என்றேன். அதை ஏற்பாடு செய்தார்கள். நீங்கள்தான் இந்த கழகத்தின் உயிர் நீங்கஇல்லை என்றால் கழகம் இல்லை. முழு வெற்றிக்கும் கழக மூத்த முன்னோடிகளின் பங்கு அதிகம் என்பதில் பெருமைப்படுகிறேன்.
நான் பெரியார், அண்ணாவை பார்த்ததில் உங்கள் ஒவ்வொருவரையும் பெரியார், அண்ணாவாகப் பார்க்கிறேன். நான் வரும்போது என்னை 'மூன்றாம் கலைஞர்' என்று அழைத்தார்கள். இனிமேல் அப்படி அழைக்க வேண்டாம். 'ஒரே கலைஞர் தான்' அதனால் மூன்றாம் கலைஞர் என்று அழைக்க வேண்டும். ஐயனார்கோவில் ராசியானது என்கிறார்கள். எனக்கு ராசிகளில் நம்பிக்கை இல்லை. மூத்த முன்னோடிகளுக்கு தாய் கழகம் சார்பில் மருத்துவ உதவி கிடைக்கும். அதேபோல இளைஞரணி சார்பில் கிடைத்த பரிசுகளை, நன்கொடைகளை ரூ.10 கோடி சேர்த்து வங்கியில் உள்ளது. அதன் வட்டியை எடுத்து மருத்துவ உதவி செய்ய இருக்கிறோம்'' என்றார்.
விழாவில் அமைச்சர் மெய்யநாதன் வெள்ளி செங்கோல் வழங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களும் கட்சியின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பழனியப்பன் மேடை அருகே அமர்ந்திருக்க, கட்சியினர் பலர் அழைத்தும் மேடைக்கு செல்லவில்லை என்பது அந்தப் பகுதியில் பரபரப்பாகவே இருந்தது.
Follow Us