/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1365.jpg)
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (31.10.2021) இரவு மர்ம நபர் ஒருவரிடமிருந்து செல்ஃபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போகிறேன்..” என கூறிவிட்டு ஃபோனை துண்டித்துள்ளார்.
உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டைச் சுற்றி மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர். அச்சோதனையில் யாரும் வெடிகுண்டு வைக்கவில்லை என்றும், இது வெறும் மிரட்டல்தான் என்றும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவுசெய்த தேனாம்பேட்டை போலீசார், மிரட்டல் விடுத்த நபரின் செல்ஃபோன் எண் சிக்னலை வைத்து, அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பழனிவேல் (40) என்பதும், கடலூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தற்போது, சென்னை மாம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார் என்பதும் தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ‘பழனிவேல் மாம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையலராகப் பணியாற்றிவருகிறார். தான் திமுக அனுதாபி என்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு படத்தில் பாட்டு பாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் மது போதையில்தான் கட்டுபாட்டு அறைக்குப் பேசியுள்ளார். முதல்வர், உதயநிதி ஸ்டாலினின் அறிமுகம் கிடைப்பதற்காக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதன் மூலம் பிரபலமாகி, உதயநிதி ஸ்டாலின் படத்தில் பாட வாய்ப்புக் கிடைக்கலாம் எனக் கருதி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பழனிவேல் தெரிவித்தார்" என்றனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)