“பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய பாதையில் பயணிக்கிறேன்” - முதல்வர்  மு.க. ஸ்டாலின்

I am traveling on the path shown by the Periyar Anna kalaignar says CM MK Stalin

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தஞ்சாவூரில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திராவிடர் கழகம் சார்பில் தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தான் கலைஞருக்கு தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடக் கூடிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய் வீட்டில் கலைஞர் மிக மிகப் பொருத்தமான தலைப்பு. எனக்கும் திராவிடர் கழகம் தான் தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை வெளியிடுவதற்காக மட்டுமல்லாமல் நானும் என் வீட்டிற்குச் செல்கிறேன் என்ற உணர்வோடு தான் இங்கு வந்துள்ளேன். அதிலும் குறிப்பாகத் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அழைத்தால் எங்கும் போவேன். எப்போதும் போவேன். எந்த நேரத்திலும் போவேன். காரணம் என்னைக் காத்தவர். இன்றைக்கும் என்னைக் காத்துக் கொண்டிருப்பவர்.

அதிலும் குறிப்பாக மிசா காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர் தான் ஆசிரியர் கி. வீரமணி. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி என்று கலைஞர் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையில் கலைஞர் இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி. அதனால் தான் நாம் போக வேண்டிய பாதை பெரியார் திடல் தான் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்” எனப் பேசினார்.

I am traveling on the path shown by the Periyar Anna kalaignar says CM MK Stalin

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கலைஞரை ஈந்த தஞ்சையில், தாய்வீடாம் திராவிடர் கழகத்தின் வாஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஆசிரியர் வீரமணி பேரன்பொழுக வெளிக்கொணர்ந்துள்ள 'தாய்வீட்டில் கலைஞர்' நூல் கழகத் தோழர்களின் கைகளில் கட்டாயம் தவழ வேண்டிய கருத்துக் களஞ்சியம். திராவிடர் கழகத்தின் பாராட்டை, என் பணிகளுக்கு ஊக்கமாகவும் உறுதுணையாகவும் எடுத்துக்கொண்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில் பயணிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

kalaignar Kalaignar100 Thanjavur
இதையும் படியுங்கள்
Subscribe