/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1k3_18.jpg)
சமூக வலைத்தளங்கள் பல்வேறு வகையில் நமக்கு பெரும் உதவியாக இருந்தாலும் கூட அவை பல நேரங்களில் பல கேடுகளை விளைவிக்கும் ஒரு சாதனமாக இருந்து வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் பல ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என பலரும் நேரம் காலம் பாராமல் பசி, தூக்கத்தை மறந்து சதா ஆண்ட்ராய்டு செல்போனில் மூழ்கி அதன் வழியாக சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் பயணம் செய்கிறார்கள். வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் பலரை நண்பர்களாகவும் நண்பிகளாகவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவற்றின் வழியாக முகம் தெரியாதவர்களிடம் கூட நெருக்கமாகப் பழகி ஏமாறுகிறார்கள். பலர் ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளத்தின் மூலம் ஆண்களிடம் பழகி 6 திருமணங்களை செய்து ஏமாற்றியுள்ளார் ஒரு பெண்மணி.
ஒவ்வொருவரிடமும் தான் ஒரு அனாதை எனக்கூறி 6 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோத்தகிரி வட்டம்,மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு 17மற்றும் 16 வயதில் இரண்டு மகன்களும் 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாலகிருஷ்ணன் இறந்து போனார். அதன் பிறகு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற கட்டட மேஸ்திரியுடன் மகாலட்சுமிக்கு அறிமுகம் கிடைத்து இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர். இதில் பாலாஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இரு குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளையும் ஒன்றிணைத்து மகாலட்சுமி பாலாஜிஇருவரும் கணவன் மனைவியாக ஊட்டியில் குடும்பம் நடத்தி வந்தனர்.
நாளடைவில் மகாலட்சுமிக்கும் பாலாஜிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்த மகாலட்சுமி ஊட்டியைச் சேர்ந்த பெயிண்டர் மணி என்பவரை அடுத்ததாக திருமணம் செய்துகொண்டார். அவருடன் மூன்று மாதம் மட்டுமே குடும்பம் நடத்திவிட்டு பிறகு அவரை விட்டுப் பிரிந்து தலைமறைவானார். பின்னர் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் அருள் என்பவருடன் சமூக வலைத்தளத்தின் மூலம் பழகி உள்ளார். அப்போது, தான் ஒரு அனாதை என்று கூறி நம்ப வைத்து ஏமாற்றி அவரைத்திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். சில மாதங்கள் கழித்து அருள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு மகாலட்சுமி தலைமறைவானார்.
அடுத்து கடந்த நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனுடன் பேஸ்புக் மூலம் பழகிய மகாலட்சுமி, அவரிடமும் தான் ஒரு அனாதை தனக்கென யாரும் இல்லை. எனவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவரது பேச்சில் கலங்கிய மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் மகாலட்சுமியை வரவழைத்து மணலூர்பேட்டையிலுள்ள ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று முறைப்படி மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
மணிகண்டன் உடன் மகாலட்சுமி ஒரு மாதம் மட்டுமே குடும்பம் நடத்திவிட்டு, அவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அங்கிருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். மனைவியின் செயல் கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் வளத்தி காவல் நிலையத்தில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 மாதமாக மகாலட்சுமியை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சின்னராஜ் என்பவரை 6வது கணவராக திருமணம் செய்து கொண்டு மகாலட்சுமி குடும்பம் நடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். சத்தமின்றி ஆத்தூர் பகுதிக்குச் சென்ற போலீசார், மகாலட்சுமி மற்றும் அவரது 6வது கணவர் சின்னராஜ் ஆகிய இருவரையும் அழைத்து வந்து முறைப்படி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மகாலட்சுமி 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஒவ்வொருவரிடமும் சில மாதங்கள் மனைவியாக வாழ்ந்துவிட்டு பிறகு அவர்களிடமிருந்து பணம், நகை கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவானது தெரிய வந்தது. இந்நிலையில் மகாலட்சுமியை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)