Advertisment

“நான் சேகுவேராவின் மகள் மட்டுமல்ல” - அலெய்டா குவேரா

- நர்மதா தேவி, சி.பி.ஐ(எம்)

publive-image

எர்னெஸ்டோ சே குவேரா. வெறும் முப்பத்தியொன்பதே ஆண்டு காலம் வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர். அவர் வீர மரணமடைந்து 56 ஆண்டுகள் கரைந்துவிட்டன. ஆனால், இன்றளவிலும் உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக அவர் திகழ்கிறார். அவரது மகள் அலெய்டா செகுவேரா, ஒரு மாத காலப் பயணமாக இந்தியாவிற்கு வந்திருப்பவர், ஜனவரி 17,18 ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகை தந்திருந்தார். அவரோடு அவருடைய மகள் எஸ்டெஃபானி மச்சின் குவேராவும் வந்திருந்தார். அவர் ஹவானா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யூ, அகில இந்திய கியூப ஒருமைப்பாட்டுக் குழு இவர்களுடைய பயணத்தை ஏற்பாடு செய்திருக்கின்றன.

Advertisment

18 ஜனவரி அன்று சோஷலிச கியூபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய கியூப ஒருமைப்பாட்டுக் குழுவும் ஏற்பாடு செய்திருந்தன. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

Advertisment

“நீங்கள் எல்லோரும் சேவின் மகள் என்பதால் என் மீது நிறைய அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். அது இயற்கைதான். அந்த அன்பில் ஒரு சிறு பகுதியாவது நீங்கள் நான் நானாக இருப்பதற்காகவும், எனது செயல்பாடுகளுக்காகவும் செலுத்த வேண்டும் என நான் கருதுகிறேன்” என்ற டாக்டர் அலெய்டா, “எனது தாயார் என்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்வார். அது எனக்கு மிகவும் முக்கியமானது. ‘நீ பலராலும் நேசிக்கப்படும் ஒரு புரட்சியாளனின் மகளாக இருப்பதால், நீ அனைவராலும் நேசிக்கப்படுவாய். ஆனால், நீ ஒன்றை நினைவில்கொள்! உனது கால்கள் இந்தப் பூமியில் உறுதியாக ஊன்றிட வேண்டும். நீ செய்ய வேண்டிய பணிகளைச் செய்து, அதற்காக நீ மதிக்கப்பட வேண்டும்!’ என்றார். நான் சேகுவேரா மகளாக இருப்பதற்காக மட்டுமல்ல, எனது அம்மாவின் மகளாக இருப்பதற்காவும் பெருமைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டார். தனது உரையின் தொடக்கத்திலேயே, தான் எப்படிப்பட்ட நுண்ணர்வு மிக்க மனிதநேயர் என்பதனை வெளிப்படுத்தி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டார்.

திராவிடக் கழகத் தலைவர் வீரமணி, திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்திப் பேசியபோது, தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகுந்த அழுத்தம் கொடுப்பதையும், அதற்கு கூட்டத்தில் உணர்ச்சிமிக்க கைதட்டல் எழுந்ததையும் கவனித்தார். ஸ்பானிஷ் மொழி மட்டுமே அறிந்த அலெய்டாவுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலம் - ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிஷ் மொழிக்குஎன மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. கூட்டம் முழுவதையும் குறிப்பெடுத்துக்கொண்டார்.

publive-image

“நான் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்துப் பணியாற்ற வேண்டும் எனச் சொல்வேன். இடதுசாரி சக்திகள் ஒற்றுமையை ஏற்படுத்திப் போராட வேண்டும்” என்றவர், “உங்கள் மாநிலத்தின் பெயரை எனக்குச் சொல்லுங்கள் பார்ப்போம்!” எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். தமிழ்நாடு என ஒரு சிலர் சொன்னாலும், “எனக்குக் கேட்கவில்லை, எனக்குக் கேட்கவில்லை” எனத் திரும்பத் திரும்பத்தமிழ்நாடு எனக் கூட்டத்தினரைச் சொல்ல வைத்தார். ஒரு கட்டத்தில் அனைவரும் தமிழ்நாடு என ஒரே குரலில் ஒன்றாக உறக்கக் கத்தியதும்… “ஆம் பார்தீர்களா?” என்றார். அரங்கம் அதிரும் கைதட்டல். சேவின் மகள் என்பதற்காக மட்டுமல்லாமல், அலெய்டாவின் கூர்மையான நுண்ணுர்வுக்காகவும் அவரைகூட்டத்தார் நேசித்தை உணர முடிந்தது.

“கியூபாவுக்கு இப்போது ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது. பத்து சதவிகித அமெரிக்க உற்பத்தி சம்பந்தப்பட்டுள்ள எந்தப் பொருளையும், சேவையையும் நாங்கள் எந்த நாட்டோடும் வர்த்தகம் செய்திட முடியாத அளவுக்கு, வட-அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை எங்கள் மீது விதித்துள்ளது. எங்களோடு வர்த்தகம் செய்யும் கம்பனிகளுக்கு பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கிறது வட-அமெரிக்கா. இதனால் நாங்கள் இரண்டு மூன்று கட்டங்களில் பிற நாடுகளுடன் வர்த்தம் செய்து பொருட்களைப் பெறும் நிலையில் இருக்கிறோம். அதனால் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கூட எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இருந்தும் நாங்கள் கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான 5 தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளோம். பிற நாடுகளுக்கு அவற்றை வழங்கியுள்ளோம்” என்றார்.

“எங்களோடு வர்த்தகம் செய்ய மாட்டோம் எனச் சொல்வதற்கு வட-அமெரிக்காவுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், எங்களோடு வர்த்தகம் செய்யக்கூடாது எனப் பிற நாடுகளைத் தடுப்பது என்பது கொடூரமானது. வெறும் 90 மைல் தொலைவில் இருந்து கொண்டு, இந்தப் பூமியின் மிகப் பெரும் முதலாளித்துவ சாம்ராஜ்ஜியத்தை எதிர்கொண்டு, சோஷலிசத்தைத் தக்கவைக்க கியூபா போராடி வருகிறது. எங்களுக்கு உங்களது ஆதரவு தேவை” என்றார்.

“2022-ஆம் ஆண்டில் ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட, கியூபாவிற்கு எதிரான அமெரிக்கத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்து, பூமியில் இருக்கிற ஏறத்தாழ அனைத்து நாடுகளும் வாக்களித்தன. இரண்டே நாடுகள் மட்டும் வாக்களிக்கவில்லை. ஒன்று அமெரிக்கா. மற்றொன்று இஸ்ரேல்”என முன்னதாக கூட்டத்தில் உரையாற்றிய அகில இந்திய கியூப ஒருமைப்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.பேபி தெரிவித்தார்.

டாக்டர் அலெய்டாவின் உரையில் இருந்து, கியூபாவில் ஜனநாயகப்பூர்வமாக மக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தி சமூகப் பண்பாட்டுத் தளத்தில் புதிய மாற்றங்கள் எப்படிக் கொண்டு வரப்படுகின்றன என்பதை உணர முடிந்தது. கியூப மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி 66 சதவிகித பெரும்பான்மை ஒப்புதலோடு புதிகாகக் கொண்டுவரப்பட்டுள்ள குடும்பச்சட்டம் பற்றிக் குறிப்பிட்டார் டாக்டர் அலெய்டா. பாலின சமத்துவத்தை கியூபாவில் நடைமுறைப்படுத்த அந்தச் சட்டம் எவ்வளவு அவசியமானது என்பதையும் விளக்கினார்.

publive-image

டாக்டர் அலெய்டா தனது உரையின் இறுதியில் சேகுவேராவைப்பற்றிகுறிப்பிட்டு விடைபெற்றது அனைவரையும் உருக்கிப்பிழிந்தது. "எனது அப்பா பொலிவியாவில் படுகொலை செய்யப்பட்டபோது, நிறைய இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் அழகான பல பாடல்களை உருவாக்கினார்கள். அவற்றில் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. இழப்பின் வலியைப் பற்றிபேசும் அந்தப் பாடல், மக்களின் வலிமையைப் பற்றியும் பேசும். 'சேகுவேராவை இழந்ததற்காக இந்த உலகம் அழுதிடும். கண்ணீரால் அல்ல, போராட்டத்தால்’ எனஅந்தப் பாடல் சொல்லும். அர்ஜென்டீனா பாடல் ஒன்று உள்ளது. 'நான் இறந்தால் எனக்காக அழுதிடாதே! நான் செய்த பணிகளைச் செய்திடு! உன்னில் நான் தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருப்பேன்'" எனக் குறிப்பிட்டு, அந்த ஸ்பானிஷ் பாடலை மிக உருக்கமாகப் பாடி முடித்தார்.

“எனது குடும்பத்துக்கு நான் எந்தப் பொருளையும் விட்டுச் செல்லவில்லை; நாடு அவர்கள் வாழ்வதற்குத் தேவையானதையும், கல்வியும் வழங்கிடும் என்பதால் நான் எதையும் கேட்கவில்லை” என்று சே தனது தோழன் காஸ்ட்ரோவுக்கு இறுதி மடலில் தெரிவித்து விடைபெற்றார். கியூபா மனிதர்களுக்கான தேசமாக இருக்கிறது. மிக அழகிய உள்ளம் படைத்தவராக சேவின் செல்லமகள் அலெய்டா குவேரா கியூபாவால் வளர்க்கப்பட்டிருக்கிறார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe