Skip to main content

"அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் கூற தயாராக இல்லை.." - மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

dmk



கொங்கு மண்டலம் எனப்படுகிற மேற்கு மண்டலத்தின் கிழக்கு வாசலாக உள்ள கரூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1,2 ஆகிய இரு நாள் பயணமும், ஏறக்குறைய ஒரு லட்சம் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வும் அடுத்து 3 ந் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாடு பிரமாண்ட விழாவாக நடந்தது, அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும், நடைபெற்று முடிந்த பணிகளை திறந்து வைத்தும், தொடர்ந்து செய்ய வேண்டிய மக்கள் நல திட்டங்களைத் தொடங்கி வைப்பது என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

 

அதன் தொடர்ச்சியாக முதல்வராக பொறுப்பேற்றபின் முதன் முதலாக கரூருக்கு 1 ந் தேதி மாலை வந்தார்.

 

திருச்சி விமான நிலையத்திலிருந்து கரூர் வரும்வரை இருபுறமும் மக்கள் காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். இரவு 8 மணிக்கு கரூர் பயணியர் விடுதிக்கு வந்தபோது அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜியால் ஏற்பாடு செய்யப்பட்ட கரூர் மாவட்ட,நகர தொழில் முனைவோர்கள் குறிப்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் காத்திருந்தனர். ஜவுளி தொழிலில் ஏற்பட்ட தேக்கத்திற்கு என்ன காரணம்? அதை முன்னேற்ற செய்ய என்ன செய்ய வேண்டும் என ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தொழில் முனைவோர்களையும், இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர் குடும்பங்களையும் தி.மு.க. அரசு காப்பாற்றும் என்ற உறுதியை முதல்வர் வழங்கினர்.

 

DMK

 

2 ந் தேதி காலை 85 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் நகரம் முழுக்க மக்கள் கடல்போல் திரண்டிருந்தனர். விழா பந்தலில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த பிரமாண்டத்தை ஏற்பாடு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜியை தட்டிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் மேடை ஏறினார் முதல்வர் ஸ்டாலின்.

 

"ஒருபுறம் அமராவதி மறுபுறம் காவேரி என கரூரில் இரண்டு நதிகள் ஓடுவதுபோல தமிழக முதல்வர் தனது இரண்டு திருக்கரங்களால் கரூரை காக்கிறார்"  என கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திராவிட பேரரசே"... என்ற கவிதையை வாசித்தார். அதை ரசித்த முதல்வர்,

 

பிறகு பேசுகையில்,

DMK

 

"கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். இங்கிருப்போரின் முகங்களில் திமுக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது. இதனால்தான் வீண் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் ஒரு சில அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் கூற தயாராக இல்லை. அதற்கு நேரமும் இல்லை.

 

தந்தை பெரியார் கூறுவார், மானத்தை பற்றி கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால் மானத்தை பற்றி கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது என அடிக்கடி சொல்வார். அப்படி மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தை பற்றி நான் மதிக்க விரும்பவில்லை.

 

dmk

 

ஊடக துறையினரிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன், திமுக ஆட்சியானது எப்படி செயல்படுகிறது என்பதை இது போன்ற மனிதர்கள் முன்னால் மைக்கை நீட்டாமல் தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். பெண்களிடம் கேளுங்கள், இருளர்கள், நரிக்குறவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலைக்கு கீழே இருக்கக்கூடிய மக்களிடம் இந்த ஆட்சியைப் பற்றி கேளுங்கள். இந்த ஆட்சியில் சமூக நீதி எந்த அளவுக்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து சமூக நீதிக்காக போராடுபவர்களிடம் கேளுங்கள், அவர்கள் இந்த ஆட்சியின் சாதனை பற்றி சொல்வார்கள். நியாயமான கோரிக்கையை யார் வைத்தாலும் அதை நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைவருடைய கருத்தையும் கேட்டு, அதனைச் செயல்படுத்தி தருபவனாகத்தான் நான் இருக்கிறேனே தவிர, நான் நினைப்பது மட்டும் தான் நடக்க வேண்டும் என நான் நினைப்பவன்  அல்ல.

 

அப்படி மக்களிடம் கருத்துக்களை பெற்று ஊடகங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தாங்களும் இருக்கிறோம் என்பதை தங்களின் இருப்பை காட்டிக் கொள்வதற்காக நாள்தோறும் மைக் முன்னால் வாந்தி எடுப்பவர்கள் அளிக்கும் பேட்டிகளுக்கும் நான் பதில் சொல்வதற்கு என்றைக்கும் தயாராக இல்லை.

 

DMK

 

திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலம் என்னை எதிர்த்து கருத்துச் சொல்வதன் மூலம் பிரபலம் அடையலாம் என நினைப்பவர்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். கோடிக்கணக்கான தமிழக மக்களின் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என விரும்புகிறவன் நான், அதுவும் சாதாரண விளக்காக அல்ல, அது அறிவு விளக்குகளாக, அன்பு விளக்குகளாக, சேவை விளக்குகளாக, மக்களுக்கு பயன் தரும் விளக்குகளாக அமைய வேண்டும் என நினைக்கின்றேன். உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு முதல்வர் நாற்காலியை தமிழக மக்கள் எனக்கு வழங்கி இருக்க காரணம் என்ன? மக்களுக்கு இந்த ஸ்டாலின் நல்லது செய்வான் என்ற நம்பிக்கையில்தான், அந்த நம்பிக்கையை நான் எந்நாளும் காப்பாற்றுவேன்.

 

 

DMK

 

கரூர் என்றாலே பிரம்மாண்டம தான். அமைச்சர் செந்தில்பாலாஜியால் தான் இந்த பிரம்மாண்டத்தை முறியடிக்கும் மற்றொரு பிரமாண்டத்தை செய்ய முடியும். கடல் இல்லா கரூரில் மக்கள் கடலை ஏற்படுத்திவிட்டார் செந்தில் பாலாஜி.." என உள்ளப் பூரிப்புடன் கூறி மீண்டும் மக்கள் கடலில் நீந்தி நாமக்கல் சென்றார் முதல்வர். அங்கும் திரும்பிய திசையெல்லாம் ஆண்கள், பெண்கள், என மலர்ந்த முகங்கள்தான்.

 

பா.ஜ.க. அண்ணாமலையை அடையாளப்படுத்தாமல் செய்த முதல்வரின் விமர்சனமும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உழைப்பை முதல்வர் பாராட்டியதும் கரூர் மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.