Skip to main content

’மதுரைக்கு தெற்கே நான்தான் தலைவர்!’ -அதிமுகவில் தளவாய்க்கு எதிராக தடாலடி!

‘அ.இ.அ.தி.மு.க தலைமைக்கு வேண்டுகோள்! கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சியை அழித்துவிட்டு, தற்போது   நெல்லை,  தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கட்சியை அழிப்பதற்கு கோஷ்டி அரசியல் செய்து வரும் டி.டி.வி.தினகரனின் கைக்கூலி N.தளவாய்சுந்தரத்தைக் கட்சியை விட்டு நீக்குங்கள்!  உண்மைத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!’ என, அ.தி.மு.க அம்மாவின் உண்மை விசுவாசிகள் என்ற பெயரில் தென் மாவட்டங்களில் சில ஊர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 I am the leader south of Madurai!...thalvai sundaram!


இதுகுறித்து, தளவாய் சுந்தரத்தின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துவரும் மதுரை அதிமுக பிரமுகர் “தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருக்கும் தளவாய்சுந்தரம் தென்மாவட்ட அதிமுகவில் கோஷ்டி அரசியல் நடத்துகிறார். அதனால், கட்சியை அழிவுப்பதையை நோக்கிக் கொண்டு செல்வதாக பலரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் வரை அவர் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கி,  கட்சிக்குள் கலகத்தை உருவாக்கி வருகிறார்.” என்றார்.    

அவரோடு இருந்த நெல்லை மாவட்ட அதிமுக பிரமுகர்  “தளவாய் சுந்தரம் குறித்து நான் அறிந்தவற்றை சொல்கிறேன்..” என்று விரிவாகப் பேசினார். 

“அப்போது, தளவாய் சுந்தரம் சென்னையில் ஒரு சாதாரண வழக்கறிஞர்தான். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரனுக்கு தினமும் வெளியில் இருந்து சாப்பாடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். 1995-ல் தென்சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ஆதிராஜாராமுக்கு ராஜ்யசபா சீட்  தரும் யோசனையில் கட்சித் தலைமை இருந்தது. அப்போது,  அவர் மீது வக்கீல் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவாகி இருந்ததால்,  அந்த வாய்ப்பை யாருக்குத் தரலாம்  என்று ஆலோசனை நடந்தபோது,    தளவாய் சுந்தரத்தின் பெயரைச் சொன்னார் பாஸ்கரன். அதன்பிறகே, சசிகலா சிபாரிசில் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி ஆனார் தளவாய் சுந்தரம்.  பின்னர்,  1999-ல் டிடிவி.தினகரன் எம்.பியானவுடன்,  டெல்லியில் அவருடைய தேவைகளைப் பூர்த்திசெய்து நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.  

 

 I am the leader south of Madurai!...thalvai sundaram!


டிடிவி.தினகரன் சிபாரிசில்தான்,  2001-ல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக பசையுள்ள பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளுக்கு அமைச்சரானார் தளவாய்.  பின்னர், துறையில் இவரது செயல்பாடுகள் திருப்தியில்லை என்று,  இவரை வருவாய்த்துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. அந்தத் துறையிலும்,  இவரது செயல்பாடுகள் சரியில்லை என்பதால், அமைச்சரவையில் இருந்தே நீக்கப்பட்டார்.  2004-ல் சசிகலா தரப்பின் நிர்ப்பந்தம் காரணமாக இவரை சுகாதாரத்துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. மிகவும் வளம் கொழிக்கும் துறைகளில் தொடர்ந்து இவர் அமைச்சராக இருந்தாலும்,  மன்னார்குடி தரப்பினர்தான் இவரது துறைகளின் வரவு செலவுகளைக் கண்காணித்து வந்தனர். அதற்கு இவர் முழுமையாக ஒத்துழைத்த காரணத்தால், கேரளாவில் உள்ள சசிகலா மற்றும் டிடிவி.தினகரனின் உறவினர்களது சொத்துகள் தளவாய்சுந்தரத்துக்கு நெருக்கமானவர்களின் பெயர்களில் இப்போதும் உள்ளன.  

 I am the leader south of Madurai!...thalvai sundaram!


2010-ல் இவரது நடவடிக்கை பிடிக்காததால்தான் குமரி மாவட்டம் சாமித்தோப்புக்கு வந்த ஜெயலலிதா இவருக்கு சீட் இல்லை என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டு,  கே.டி.பச்சைமாலை தேர்தல் வேலை பார்க்கும்படி கூறினார்.  அதன்படியே,  பச்சைமாலுக்கு 2011-ல் சீட்டும் தந்தார்.  சசிகலா குடும்பத்தினரை 2011-ல் ஜெயலலிதா ஒதுக்கிவைத்திருந்த போது, டிடிவி.தினகரனுடன் சென்னை லைட்ஹவுஸ் அருகில் தளவாய் சுந்தரம் ஆலோசனை செய்து கொண்டிருந்த தகவல் கிடைத்தது. அதனால்,   இவரது அமைப்புச் செயலாளர் பதவியும் பறிபோனது. 2016-ல் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுக்கு நெருக்கமான ஜெயா டிவி நிர்வாகி ஒருவரின் சிபாரிசால்தான் இவருக்கு மறுபடியும் கன்னியாகுமரியில் சீட் கிடைத்தது. கட்சிக்கோ, ஜெயலலிதாவுக்கோ விசுவாசமாக இல்லாமல் சசிகலா குடும்பத்திற்கு, குறிப்பாக டிடிவி.தினகரனுக்கு மட்டுமே தளவாய் சுந்தரம் விசுவாசமாக இருந்தார்... இருக்கிறார்... இனிமேலும் இருப்பார். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.  ஆனால்,  அவர்களுக்காக அதிமுக என்ற மக்கள் இயக்கத்தை அழிக்க நினைக்கும்போது நாங்கள் எப்படி வேடிக்கை பார்க்கமுடியும்? 

 I am the leader south of Madurai!...thalvai sundaram!


2001-ல் இவரோடு சேர்த்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கே.டி.பச்சைமால், கே.பி.ராஜேந்திரபிரசாத் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றனர். ஆனால்,  தனது கோஷ்டி அரசியலால்,  மூத்த கட்சியினரை சசிகலா தரப்பினரை வைத்துக் காலி செய்து விட்டார். இன்று 3 தொகுதிகளில் டெபாசிட் காலியாகின்ற அளவுக்கு கட்சியை அழித்தும் விட்டார். தற்போது,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு,  தென்மாவட்டங்களில் தான் மட்டுமே நெருக்கமானவர் என்ற இமேஜை உருவாக்கப் பார்க்கிறார். கட்சியில் என்ன நடக்கிறது என்பதை இவர் உடனுக்குடன் டிடிவி.தினகரனுக்கு ரன்னிங் கமென்டரிபோல கொடுத்துக்கொண்டே இருக்கிறார். தற்போதுள்ள பிரச்சனையே, இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நாங்குனேரிதான். நாங்குனேரி தொகுதியில் யார் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதைக் கட்சி முடிவு செய்யட்டும்.  அதை அனைவரும் ஏற்று செயல்பட தயாராக உள்ளோம். ஆனால்,  தனக்கு வேண்டப்பட்ட கைத்தடிகள் சிலரை முதல்வரிடம் கொண்டுபோய் அறிமுகப்படுத்தி அவர்களுக்குத்தான் சீட் என்று தம்பட்டம் அடித்து வருகிறார் தளவாய் சுந்தரம். இதை மானமுள்ள கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை தலைமைக்குத் தெரியப்படுத்துவதற்காகத்தான் போஸ்டர் ஒட்டியிருக்கிறோம். 
 
கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களையோ,  நிர்வாகிகளையோ,  இவர் தலைமையிடம் அறிமுகப்படுத்தி சீட் வாங்கித் தந்தால் அதை வரவேற்போம். இவர் ஆரம்பத்திலிருந்தே,   ‘அந்த’ விஷயத்தில் ஈடுபாடு காட்டிவருபவராக இருக்கிறார்.  இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது கோமதி என்ற டாக்டரை தொந்தரவு செய்து அது பெரிய அளவில் பிரச்சனை ஆனது. தனது அதிகாரத்தின் மூலம் அப்பிரச்சனையை அப்போது மூடிமறைத்து விட்டார். இப்போதும் தனக்கு ‘அந்த’ விஷயத்தில் அனுசரணையாக உள்ளவர்களை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டு வலம் வருகிறார். திமுகவில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தென்மண்டலத்துக்கு அழகிரி பவரில் இருந்தது போல,  தற்போது மதுரைக்கு தெற்கே நான் தான் தலைவர். என்னைக் கேட்காமல் யாரும்  இங்கு கட்சியை நடத்த  முடியாது என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இதுபோன்ற இவருடைய நடவடிக்கைகளுக்கு,  தென்மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களும் எதிராகத்தான் உள்ளனர். தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர், யாதவர், நாடார் மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கட்சியினரை,  தனக்கு அடிமைகள் என்று சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கின்றன இவரது நடவடிக்கைகள்.  இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால்,  இவரைக் கட்சியை விட்டே நீக்கவேண்டும்.” என்றார் வேகத்துடன். 

நாம் தளவாய் சுந்தரத்தை தொடர்புகொண்டோம். ““வேற ஒண்ணுமில்ல. நாங்குனேரி தொகுதியில் எனக்கு சீட் கிடைத்து நான் நின்னுறுவேனோன்னு சிலருக்கு சந்தேகம் வந்திருச்சு. நான் அந்தத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான சமுதாயத்தைச் சேர்ந்தனல்ல. எனக்கு அப்படி ஒரு ஆசையே இல்லை.  நானோ, தினகரனோ ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது கிடையாது. கோமதி, ஜெயலட்சுமியெல்லாம் முடிந்துபோன கதை.  அமமுகவில் இருக்கின்ற எல்லாரையும் அதிமுகவில் கொண்டுபோய்ச் சேர்க்கிறாரே! இவருக்கு வேறு எதுவும் எண்ணம் இருக்குமோங்கிற சந்தேகம். நான் ஒரு நல்ல எண்ணத்துல பண்ணுறேன். சி.எம்.கிட்ட பேசி நான் ராஜ்யசபா எம்.பி. ஆகிவிடுவேனோன்னு சிலருக்கு சந்தேகம். நான் முதலமைச்சர்கிட்டயோ, துணை முதலமச்சர்கிட்டயோ அப்படி எதுவும் கேட்கல.  அடிப்படையில் எனக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது. தென் மாவட்ட அமைச்சர்கள் யாரும் எனக்கு எதிரி இல்ல. கடம்பூர் ராஜு என்னோடுதான் இருக்கிறார். ராஜலட்சுமி, அந்தம்மா பிரச்சனையே கிடையாது. ராஜேந்திரபாலாஜியும் என்கூடத்தான் இருக்காரு. ராமநாதபுரம் அமைச்சரும் நல்லாத்தான் இருக்கிறார். நாங்க எல்லாரும் ஒருவருக்கொருவர் தகவல் சொல்லுற அளவுக்கு நல்லா பழகிட்டிருக்கோம்.  எதிராளி யாருன்னு தெரியல.   என்னை டேமேஜ் பண்ணனும்னு நினைக்கிறாங்க. நாங்குனேரி எம்.எல்.ஏ. சீட் கிடைக்கணும்னு நினைக்கிறவங்களோ,  ராஜ்யசபா எம்.பி. ஆகணும்கிற திட்டம் வச்சிருக்கிறவங்களோ,  யாருக்கோ என்னை டேமேஜ் பண்ணியே ஆகணும்கிற நோக்கம் வலுவா இருக்கு.” என்றார்.   

ஒற்றைத் தலைமை என்று முதலில் எதிர்ப்பு கிளம்பியது மதுரையிலிருந்துதான். அதிமுகவை அழிக்கிறார்கள் என்று போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் தென் மாவட்டங்களில் இருந்துதான்!

 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...