Skip to main content

"அமைச்சர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு அதிகாரிகளை நேரில் அழைத்து பேச இருக்கிறேன்" - முதல்வர் பேச்சு

 

dmk

 

தென்காசியில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 'பொதிகை எக்ஸ்பிரஸ்' ரயிலில் சலூன் கோச்சில் தென்காசி புறப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில், இன்று தென்காசி கணக்குப்பிள்ளை வலசை பகுதியிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த நலத்திட்ட விழாவில் சுமார் 182 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய முதல்வர், ''அனைத்திலும் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களைத் தீட்டி வருவது மட்டுமல்ல, அந்தத் திட்டங்களால் தமிழகம் உயர்ந்து வருவதைக் கண்ணுக்கு முன்னால் நான் பார்க்கிறேன். நாள்தோறும் எங்களுக்குக் கிடைக்கின்ற செய்திகள் இதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

 

ஒன்றிய அரசின் சார்பில் வெளியாகக் கூடிய புள்ளி விவரங்களைப் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி கண்ணுக்குத் தெரியும். சில தன்னார்வல அமைப்புகள் வெளியிடுகின்ற அளவீடுகளைப் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தெரியும். ஆங்கில ஊடகங்கள் வெளியிடுகின்ற கட்டுரைகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிரமிப்போடு எழுதுகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. எல்லாப் பிரிவினரையும் அரசு உயர்த்தி வருகின்றது என்பதற்கான திட்டவட்டமான சான்றுகளாக அமைந்திருக்கிறது.

 

இவை அனைத்திற்கும் மேலாக பயனடைந்த மக்களுடைய மனங்களில் உருவாகி வரக்கூடிய மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன். தென்காசியிலிருந்து இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு 15 நிமிடத்தில் வந்து சேர்ந்துவிடலாம் .ஆனால், இங்கு நாங்கள் வருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. என்ன காரணம்... வரும் வழியெல்லாம் சாலைகளில் இருபுறங்களிலும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் நின்று கொண்டு என்னை வரவேற்றது மட்டுமல்ல; வாழ்த்தியது மட்டுமல்ல; 'இந்த ஆட்சிதான் தொடர வேண்டும்... இந்த ஆட்சி தான் தொடர வேண்டும்...' என்று அவர்கள் என்னை ஊக்கப்படுத்திய அந்தக் காட்சியை நான் பார்த்தேன். இதுதான் நல்லாட்சிக்கு அடையாளம்.

 

திட்டமிடுவது, செயல்படுத்துவது, அதை நிறைவேற்றுவது தான் என்னுடைய பணியாக இருக்கிறது. திட்டத்தை அறிவித்தோம், நிதியை ஒதுக்கினோம், அதோடு கடமை முடிந்து விட்டது என்று இல்லாமல் ஒவ்வொரு நாளும் அதை நான் கண்காணிக்கிறேன். ஒரே காலத்தில் அனைத்துத் திட்டங்களையும் முடிப்பது தான் என்னுடைய இலக்கு என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றுப்பயணத்தை நடத்தி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பணிகளை முடித்துக் கொண்டு வருகிறேன். திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா என ஒவ்வொரு மாவட்டத்திலும் முடித்துக் கொண்டு வருகிறேன். அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக இந்தத் திட்டப் பணிகள் குறித்து குறிப்பிட்ட மாவட்டத்திற்கு நான் வந்து ஆய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.

 

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட பணிகள் நடைபெறுவதை நானே பார்த்து அந்த பணிகளை முடுக்கி விடப் போகிறேன். அமைச்சர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு அலுவலர்கள், அதிகாரிகளை எல்லாம் நேரில் அழைத்துப் பேச இருக்கிறேன். நாங்கள் என்ன நோக்கத்திற்காக இந்தத் திட்டங்களைத் தீட்டித் தருகிறோமோ, அதே நோக்கம் கடைநிலை அலுவலர்கள் வரை இருந்தால்தான் அந்தத் திட்டத்தினுடைய நோக்கம் முழுமையடையும். 'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களோடு இருந்து கற்றுக் கொள்' என்று சொன்னார் அறிஞர் அண்ணா. அதன்படி மக்களுக்கான அரசாக நம் அரசு செயல்படும்'' என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !