
தமிழகத்தின் வளர்ச்சி இலக்குகளை இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பெருமை கொள்வது மட்டுமே போதாது. வளர்ந்த நாடுகள், தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டு இலக்குகளை ஏற்படுத்தி அதனை அடைய வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துத் துறை செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டமன்ற பேரவையில் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக்கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது வெளியிடப்பட்ட அறிவுப்புகள் மற்றும் விதி 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுவரை வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில் 1,313 அறிவிப்புகள், அதாவது 80 சதவீத அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் 10.01.22 வரை சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்ள கடைமைப்பட்டுள்ளேன். மீதமுள்ள அறிவுப்புகளுக்கு உரிய ஆணைகளையும் உடனடியாக வெளியிட்டு 100 விழுக்காடு இலக்கினை அடைய வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். வெளியிட்ட ஆணைகள் அனைத்தும் செயல்பாட்டில் வந்துள்ளனவா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது.

ஆணைகள் வெளியிடப்பட்ட பணிகளுக்கான நிதி உரிய காலத்தில் விடுவிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெறுவதை இனி நீங்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும்.மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள 20 அறிவிப்புகளில் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளோடு தொடர்ந்து தொடர்புகொண்டு உரிய முறையில் வலியுறுத்தி தேவைப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையும் ஒப்புதல்களையும் பெற ஆவண செய்ய வேண்டும்.உங்களுக்கு நீங்களே ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான திட்டங்கள், அடுத்த 4 ஆண்டுக்கான திட்டங்கள், 2030 வரையிலான திட்டங்கள் என திட்டமிட வேண்டும்.
Think big, Dream big, Results will be big என்ற கூற்றின்படி நமது சிந்தனைகளும் கனவுகளும் குறிக்கோள்களும் பெரிதாக இருந்தால்தான் நமது சாதனைகளும் பெரிதாக இருக்கும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நம்மை விட அதிகமாக வளர்ந்தவர்களோடு ஒப்பிட வேண்டும். நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு நாம் சிறப்பாக செய்துகொண்டு இருக்கிறோம் என்ற மனநிலையினைத் தவிர்க்க வேண்டும். வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் செயல்பாடுகளுக்கு இணையாக நம்முடைய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். நம்முடைய இலக்குகள் அனைத்தும் திட்டம் அடிப்படையில் மட்டுமே இல்லாமல், நாம் அடைய வேண்டிய நோக்கத்தினை சென்றடையும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நீர்வளங்களை மேம்படுத்துவதற்கும், வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கும், கல்வி தரத்தை உயர்த்துவதற்கும், சுகாதர குறியீடுகளை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் வீடு என்ற இலக்கினை அடைவதற்கும், தொழில்துறையில் உயரிய வளர்ச்சியை ஏய்வதற்கும், நம்முடைய இளைய சமுதாயத்தினரை மேம்படுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதற்கும் தொடர்புடைய துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த உயரிய நோக்கின் இலக்கினை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.