Skip to main content

'இதில் நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி'-முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி!

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

 'I am AR Rahman's party in this' - Former Minister Mafa Pandiyarajan interview!

 

அண்மையில் மத்திய அமைச்சர் அமித் ஷா 'இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டிய தருணம் இது' என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழகத்தில் அதற்கு எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி' என்று கருத்து தெரிவிக்க, பல்வேறு பிரபலங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினர். இதற்கு முன்பே இதேபோன்ற இந்தி திணிப்பு தொடர்பான பேச்சுக்கள் தமிழகத்தில் உருவானபோது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் இடம்பெற்ற டி ஷர்ட் அணிந்திருந்தது ட்ரெண்ட் ஆனது.

 

இந்நிலையில் திரைப்பட நடிகை சுகாசினி இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேச வேண்டும் என்றால் இந்தி கற்று கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். இந்நிலையில் இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 'நான் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை ஏ.ஆர் ரஹ்மான் கட்சி. என்னைப் பொறுத்த வரைக்கும் தமிழ் மொழி இணைப்பு மொழியாக பரிசீலிக்கப்பட வேண்டும். இந்தியாவின் மூத்த மொழி தமிழ். அதற்குத்தக்க முயற்சிகளை தமிழக அரசாங்கம் எடுக்க வேண்டும். போன ஆட்சியில் அதிக தமிழ் மையங்களை உருவாக்கினோம். அதுபோன்று அதிக மையங்களை உருவாக்க வேண்டும். பண்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும், தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய மையங்களை உருவாக்க வேண்டும், பன்மடங்கு அவற்றையெல்லாம் உருவாக்கினால் ஒரு காலகட்டத்தில் இணைப்பு மொழியாக தமிழ் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளை நாம் இன்னும் அதிகமாக எடுக்க வேண்டும். பல பேருக்கு தெரிவதில்லை. ஹிந்தி தான் தேசிய மொழி என்ற கருத்தை அவ்வளவு பெரிய நடிகர் அஜய் தேவ்கன் அழுத்தமாகப் பதிவு செய்கிறார் என்றால் அவருக்கு தெரியவில்லை என்று அர்த்தம். இதைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த டிராக் மிகச்சரியான டிராக் அதற்கு நாம் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
ar rahman prabhu deva movie update

பிரபுதேவா தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதுப் பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து தயாரிக்கின்றனர். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைக்கிறார். 

ar rahman prabhu deva movie update

ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் - பிரபு தேவா இருவரும் காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.