Skip to main content

கணவனின் முறையற்ற தொடர்பு... ஊரையே அலறவிட்ட மனைவியின் செயல்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

சென்னையில் மணலியில் கணவன் முறையற்ற தொடர்பிலிருந்ததை கண்டித்த மனைவி கதவை தாழிட்டுக்கொண்டு சமையல் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு அந்த பகுதி மக்களை அலறவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னை மணலி ஈ.வே.ரா பெரியார் தெருவில் வசித்து வருபவர்கள் ரமேஷ் கண்ணா-ரேணுகா தம்பதியினர். மதுரையைச் சேர்ந்த ரேணுகாவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் கண்ணா திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரமேஷ் கண்ணா ஒரு ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். ரேணுகா வீட்டிலேயே பியூட்டி பார்லர் நடத்திவந்தார். ரமேஷ் கண்ணா அண்மை காலமாக வேறொரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரமேஷ் கண்ணா-ரேணுகா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ரேணுகாவுக்கும் கணவன் ரமேஷ் கண்ணாவிற்கும் இடையே முறையற்ற தொடர்பு குறித்து மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரேணுகா அறையின் கதவை தாழிட்டுக்கொண்டு  அறையில் இருந்த மூன்று கேஸ் சிலிண்டர்களை திறந்து வைத்துள்ளார். அறையில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்ட ரேணுகா தனக்கு நீதிவேண்டும் என சொல்லியபடி கதவை திறக்க மறுத்தார்.

 

இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் மணலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் ரேணுகா கதவை திறக்கவில்லை. இதனால் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற நிலையில் 108 ஆம்புலன்ஸ்-ம் கொண்டு வரப்பட்டது. மேலும் ரேணுகா இருந்த வீட்டை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக போலீசாரின் அறிவுறுத்தல்படி வெளியேற்றப்பட்டனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த மணலி கவுன்சிலர் ரேணுகாவிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, ரேணுகாவின் தாய், உறவினர்கள் என யார் பேச்சும் எடுபடாமல் போனது. மதியம் சுமார் 12 மணிக்கு கதவை தாழிட்ட ரேணுகா இரவு 8 மணிவரை கதவைத் திறக்கவில்லை. இதனால் மின்சாரம் இல்லாமல் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் அவர் இப்படித்தான் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதாக பூச்சாண்டி காட்டுவார். நாங்களே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போகிறோம் என ரவுத்திரமாக பேச தொடங்கினர். இனியும் பொறுக்கமுடியாது என முடிவெடுத்த போலீசார் தண்ணீரை பீச்சி அடித்துக்கொண்டே கதவை உடைத்தனர். உள்ளே மயங்கிய நிலையில் இருந்த ரேணுகா மீட்கப்பட்டார். ரேணுகா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்ததும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister MK Stalin propaganda In Chennai

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இதனையொட்டி அரசியல் கட்சிகளின், தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் இன்று (17.04.2024) மாலை 4 மணிக்கு தமிழ்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.