/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_126.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அமைந்துள்ளது அரசம்பட்டு கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கிருஷ்ணன். 38 வயதான இவர் அரசம்பட்டு பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பூட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் கலைச்செல்விக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதி தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்க நினைத்த சமயத்தில், இவர்களுக்கு ஆரம்பமே பேரடியாக அமைந்தது. கிருஷ்ணன் - கலைச்செல்வி தம்பதிக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் உறவினர்களும் நண்பர்களும் இவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் கலைச்செல்வி அதற்கான மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
தங்களுக்குக் குழந்தை இல்லை என்பதால்.. கிருஷ்ணனுக்கும் கலைச்செல்விக்கும் இடையே சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்தது. ஆரம்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த இவர்களது குடும்பத்தில் இந்த குழந்தை பிரச்சனையால்.. பல்வேறு சம்பவங்கள் பூதாகரமாக வெடித்தது. ஒருகட்டத்தில், தனது கணவரை விட்டுப்பிரிந்த கலைச்செல்வி கடந்த இரண்டு மாதங்களாகப் பூட்டை கிராமத்தில் உள்ள அவருடைய தந்தை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, கிருஷ்ணனின் நண்பர்கள், "மச்சான் உனக்கெல்லாம் எப்போமே குழந்தை பிறக்காதுடா நீ எல்லாம் செத்துப் போடா" எனச்சொல்லி கிருஷ்ணனை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிருஷ்ணன், அன்றைய தினம் அதிகளவில் மது அருந்தியுள்ளார். தலைக்கேறிய போதையில் இருந்த கிருஷ்ணன் நேராகத் தனது மாமனார் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மனைவி கலைச்செல்வியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் பலத்தகாயமடைந்த கலைச்செல்வி, ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். பின்னர், இவரது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் கலைச்செல்வியை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கலைச்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சங்கராபுரம் காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, மனைவியின் கழுத்தை அறுத்த குற்றவாளி கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். குழந்தை இல்லாத விரக்தியில் மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம்.. கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)