Skip to main content

மனைவிக்கு தொல்லை கொடுத்தவரைக் கொன்ற கணவர்; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Husband who incident his wife misbehave gets life imprisonment

கோபிசெட்டிப்பாளையம் அருகே அவ்வையார் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (35). ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி  அன்று அதே ஊரைச் சேர்ந்த மணி மோகன் (53) மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த விஜயகுமார், மணி மோகன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவரது மனைவி கூச்சலிட்டார். அங்கிருந்து விஜயகுமார் தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணி மோகன், விஜயகுமாரை தீர்த்துக் கட்டாமல் விடமாட்டேன் என்று  அவரைத் தேடி வந்துள்ளார். 

இந்த நிலையில், அவ்வையார் பாளையம், சின்னக்குளம் பிரிவு ரோட்டில் மணி மோகன் மற்றும் அவரது உறவினர்கள் நாகராஜ் (30), பூபதி ராஜா (39), சதீஷ்குமார்(33), மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சேகர் (24), சோமசுந்தரம் (39), விக்னேஷ்வர் (24) ஆகிய 7 பேரும் சேர்ந்து விஜயகுமாரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மணி மோகன், விஜயகுமார் வாயில் பூச்சி மருந்தை ஊற்றியுள்ளார். பூபதி ராஜா தனது மோட்டார் சைக்கிளால் விஜயகுமார் கழுத்தில் ஏற்றி உள்ளார். நாகராஜ் அவர் மீது சுடு தண்ணீர் ஊற்றியுள்ளார். இவ்வாறு அவர்கள் விஜயகுமாரை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். 

இது குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தயாநிதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மணி மோகன், நாகராஜ், பூபதி ராஜா, சதீஷ்குமார் ஆகிய நான்கு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும் வழக்கில் தொடர்புடைய சேகர், சோமசுந்தரம், விக்னேஸ்வர் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் வெற்றிவேல் ஆஜரானார்.

சார்ந்த செய்திகள்