
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சின்ன செவலை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 60 வயது முத்துக்கண்ணு. இவர் மனநிலை பாதிக்கப்பட்டு, பல இடங்களில் சுற்றித்திரிந்து கொண்டு இருந்துள்ளார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் அங்கு உள்ளவர்களை மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில்கடந்த 10ஆம் தேதி, வயலில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த தனது மனைவி நாவம்மாளை வெட்டுவதற்காக கத்தியோடு ஓடியுள்ளார். இதைக் கண்டு பயந்து மிரண்டு போன நாவம்மாள், அருகிலிருந்த ரேவதி என்பவரது வீட்டிற்குள் புகுந்து தப்பிச்சென்றுள்ளார். இந்த நிலையில் ரேவதி வீட்டிற்குள் நுழைந்த முத்துக்கண்ணு, அங்கு சமையல் செய்துகொண்டிருந்த ரேவதியைசரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ரேவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிரசிகிச்சை பெற்று வந்த ரேவதி, நேற்று (25.04.2021) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையொட்டி திருவெண்ணெய்நல்லூர் போலீசார், முத்துக்கண்ணு மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது அதை கொலை வழக்காக மாற்றி முத்துக்கண்ணுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்டவர் அப்பாவிப் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us