Skip to main content

கணவர் கண் முன்னே மனைவியுடன் குடும்பம் நடத்திய இளைஞர்!

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

 husband stabbed a young man who had a family with his wife in Salem

 

சேலம் அருகே, தன் மனைவியோடு குடும்பம் நடத்தியதோடு வீட்டுக்கு எதிரிலேயே குடித்தனம் புகுந்த நண்பனை, இளைஞர் ஒருவர் சரமாரியாகக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

சேலத்தை அடுத்த கருப்பூர் வெள்ளைக்கல்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (34). கார் ஓட்டுநர். இவருக்குத் திருமணமாகி மனைவியும் இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). கட்டடத் தொழிலாளியான இவரும் பாலமுருகனும் நண்பர்கள். இதனால் அடிக்கடி பாலமுருகனின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார் மணிகண்டன். இதில், அவருடைய மனைவிக்கும் மணிகண்டனுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதையறிந்த பாலமுருகன், தன் மனைவியையும் நண்பனையும் எச்சரித்தார். ஆனால், தகாத உறவைக் கைவிடாமல் தொடர்ந்து ரகசியமாகச் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பு, மணிகண்டனும் பாலமுருகன் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

 

வெளியூரில் வசித்து வந்த அந்த ஜோடி, சில நாள்களுக்கு முன்பு பாலமுருகனின் வீட்டிற்கு எதிரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடி புகுந்தனர். இதனால் பாலமுருகனின் இரண்டு வயது ஆண் குழந்தை, எதிர் வீட்டில் வசிக்கும் தன் தாயைப் பார்க்க அங்கு அடிக்கடி சென்று வந்தது. இதைப் பார்த்து பாலமுருகன் மிகவும் மன வேதனை அடைந்தார். மனைவியுடன் குடும்பம் நடத்தியதோடு, தன் வீட்டுக்கு எதிரிலேயே அவருடன் மணிகண்டன் குடும்பம் நடத்தி வருவது பாலமுருகனுக்குள்  கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7 ஆம் தேதி பாலமுருகன், அவருடைய தந்தை சுப்ரமணி, பெரியப்பா கிருஷ்ணன் ஆகியோர் மணிகண்டனின் வீட்டுக்குச்  சென்று, வீட்டை விட்டு வெளியேறிப் போன நீங்கள், இப்போது ஏன் இதே இடத்துக்கு வந்து எங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

 

அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் வயிறு, தோள் பட்டையில் சரமாரியாகக் குத்தினார். அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததை அடுத்து பாலமுருகனும் அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் பாலமுருகன், அவருடைய தந்தை, பெரியப்பா ஆகியோர் மீது ஆயுதத்தால் தாக்கியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். முதல்கட்டமாக பாலமுருகனை கைது செய்துள்ளனர். மற்ற  இருவரையும் தேடி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு; அதிகாலையில் என்கவுன்டர்?

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Hype over the Armstrong case; An early morning encounter?

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாக 11 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த பொழுது இன்று காலை 5 மணி அளவில் மாதாவரம் ஏரிக்கரை பின்புறம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது போலீஸ் காவலில் இருந்து திருவேங்கடம் (33 வயது) தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. தப்ப முன்ற திருவேங்கடத்தை போலீசார் சுட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டடியுடன் தப்பிய திருவேங்கடம் தற்போது உயிருடன் உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது தொடர்பாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த சம்பவம் இந்த கொலை வழக்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆந்திராவில் இருந்து தென்மாநிலங்களுக்குக் கடத்தப்படும் கஞ்சா; சுற்றிவளைத்த தமிழக போலீஸ்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
cannabis smuggled from Andhra, Telangana to Tamil Nadu, Karnataka, Kerala by car and train

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் கஞ்சா கடத்திய வரப்படுவதாக வந்த ரகசியத் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள வேலூர் மாவட்டம் சைணகுண்டா சோதனை சாவடி அருகே குடியாத்தம் தாலுகா போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது.  கஞ்சாவைக் கடத்தி வந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குடியரசன் (24) கோகுல்குமார் ( 26) மாதேஷ் (21) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்( 23) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட குடியரசன் மற்றும் கோகுல்குமார் ஆகிய இருவரும் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக டாடா நகர் பகுதியில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தப்படுவதாக வேலூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரக்கோணம் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துறையினருடன் இணைந்து ரயிலில் சோதனை மேற்கொண்டனர். 

முன்பக்க சாதாரண பெட்டியில் சந்தேகம் அளிக்கக் கூடிய வகையிலிருந்த நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 பாண்டல்களில் இருந்த சுமார் 14 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுப்ரமணியம் (21) மற்றும் அப்துல் (18) ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வனப்பகுதிகளில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளுக்குள் நுழைந்து மாநில இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கி வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறை பெரும் முயற்சிகள் எடுத்தாலும் கஞ்சா கடத்தி வருவதற்காக அனுப்பப்படும் குருவிகளுக்குத் தரப்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் அவர்களை இந்த தொழிலைக் கச்சிதமாகச் செய்யவைக்கிறது.