/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-14_45.jpg)
சென்னை, வண்ணாரப்பேட்டை அடுத்துள்ளது மூலக்கொத்தளம். இப்பகுதியில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் 1 வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம். 55 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மினி. இந்தத்தம்பதிக்கு திருமணமாகி 35 ஆண்டுகளான நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருவதால், செல்வம் - பத்மினி தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், செல்வம்-பத்மினிக்கு இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு இருந்துள்ளனர். அந்த வகையில், கடந்த மே 5 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் செல்வம் தம்பதிக்கு பணம் தொடர்பாக மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த செல்வம் வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்துள்ளார். அதனை மறைத்து வைத்து மனைவி பத்மினியிடம் சென்றவர், 7 இடங்களில் சரமாரியாக அவரை குத்தியுள்ளார்.
இதைச் சற்றும் எதிர்பாராத மனைவி பத்மினி, மயக்கமாகி கீழே சரிந்து விழுந்தார். தொடர்ந்து, மனைவியை தன் கையாலேயே குத்தி கொலை செய்தோம் என்ற குற்ற உணர்ச்சியில், செல்வம் அதே கத்தியால், தனக்கு தானே குத்திக்கொண்டுள்ளார். இதில், குடல் சரிந்த நிலையில் கீழே விழுந்த செல்வம், வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். உடனே, அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள்.. வீட்டின் உள்ளே இருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்துபோயினர்.
இதையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக இந்தத் தம்பதியரின்மகன் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பதறியடித்து ஓடிவந்த பாலாஜி, ஆபத்தான நிலையில் இருந்த தாய், தந்தை இருவரையும் மீட்டு அவசர ஊர்தியின் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைக்கு சேரத்தார். அங்கு, சுயநினைவின்றி சிகிச்சை பெற்றுவந்த பத்மினி அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், நல்வாய்ப்பாக தற்கொலை முயற்சி செய்த செல்வம் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனிடையே, தகவலின் பேரில் கொலை சம்பவம் நடைபெற்ற வீட்டுக்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் சொல்லப்படுகிறது. அதில், 8 ஆண்டுகளுக்கு முன்பு விஆர்எஸ் பெற்ற செல்வம் கடன் பிரச்சனையில் இருந்துள்ளார். அந்தச் சமயத்தில் செல்வம் தனது மனைவியிடம் புதிதாக கடை ஒன்றை தொடங்க இருப்பது குறித்து யோசனை கேட்டுள்ளார். ஆனால், ஏற்கெனவே கடன் சுமை அதிகமாக இருக்கும் சூழலில் இப்போது ஏன் புதிய கடை என மனைவி பத்மினி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடைபெற்ற கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த வண்ணாரப்பேட்டை அருகே குடும்ப தகராறில் கணவனே மனைவியைக் குத்தி கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)