
நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக அறியப்படுபவர் சாட்டை துரைமுருகன். அண்மையில் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சுங்குவார்சத்திரத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாக திருச்சி பிராட்டியூர் அருகே உள்ள அலுவலகத்தில் இருந்த சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சாட்டை துரைமுருகன் ஏற்கனவே இரண்டு முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி, தனது கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே அவரை மீட்டுத் தர வேண்டும் என்று நேற்று (19.12.2021) திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், ‘நேற்று (18ஆம் தேதி) மாலை 4 மணி அளவில் திருச்சி பிராட்டியூரில் உள்ள அவரது அலுவலகத்தில் காவலர்கள் என்று கூறி வந்த ஏழு பேர் அவரை விசாரணை என்று அழைத்துச் சென்றுள்ளனர்.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போதுவரை சாட்டை துரைமுருகன் எங்கு உள்ளார். எந்தக் காவல் நிலையத்தில் உள்ளார் என்று தகவல் தெரியாத காரணத்தினால் அவரது மனைவி மாதரசி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் தனது கணவரின் உயருக்கு ஆபத்து உள்ளது. எனவே அவரை மீட்டுத் தர வேண்டும் என்று மனு அளித்தார். அப்போது நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் உடன் இருந்தனர். தற்போது அவரை சென்னை கொண்டு சென்றிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.