Skip to main content

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு 

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Husband lost their life   over wife's death

 

ஈரோடு மாவட்டம் பங்களா புதூர் அடுத்த மாரியம்மன் கோவில் வீதி, வேட்டுவன் புதூர், ஏளுரைச் சேர்ந்தவர் பழனியப்பன்(71). இவரது மனைவி பொட்டாயாள். இருவரும் அதே பகுதியில் தனியாக வசித்து ஆடுகளை மேய்த்து வந்தனர். இந்நிலையில் பொட்டாயாள் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறந்ததிலிருந்து பழனியப்பன் சோகத்துடன் இருந்து வந்துள்ளார். அவரது மகன் தந்தைக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். 

 

இந்நிலையில், சம்பவத்தன்று பழனியப்பன் திடீரென வாந்தி எடுத்தார். இது குறித்து அவரது மகன் கேட்டபோது, பழனியப்பன் விஷ மருந்தை சாப்பிட்டதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாகத் தந்தையை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழனியப்பன் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Strong room CCTV camera malfunction; Sensation in Erode

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இதனையடுத்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாட்டுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிர்ஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.