
கள்ளக்குறிச்சி அருகே கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கணவன் கண்முன்னேயே மனைவி மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணன்-சுபா தம்பதி. இவர்களுக்கு 10 வயதில் கவுதம் என்ற மகன் உள்ளார். தியாகதூர்கம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு கண்ணன் தன் குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது கள்ளக்குறிச்சியை காந்தி சாலை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் இவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் கண்ணனின் மனைவி சுபா மற்றும் அவருடைய மகன் கவுதம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். கண்முன்னே மனைவியும் மகனும் உயிரிழந்ததைக் கண்டு கண்ணன் கதறி அழுதார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில் உயிரிழந்த இருவர்களின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். அதேபோல சிறு காயங்களுடன் தப்பிய கண்ணன் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக போலீசார் அங்கு வந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனின் கண்முன்னேயே மனைவியும் மகனும் உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.