
கணவர், அவருடைய தோழியுடன் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த மனைவி, விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் 3 சாலை பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (29), லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி கோமதி (20). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் குழந்தை உள்ளது.
கணவருக்கு, அவருடைய நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவருடன் திருமணத்திற்கு முன்பிருந்தே நெருக்கமான தொடர்பு இருந்துவந்துள்ளது. உறவினர் என்ற பெயரில் ரகசிய தோழியை அடிக்கடி வீட்டுக்கும் அழைத்துவந்துள்ளார் சந்தோஷ். அவர்கள் இருவருக்கும் உள்ள நெருக்கம் குறித்து அரசல் புரசலாக தெரியவந்ததை அடுத்து, சந்தோஷுக்கும், கோமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதையடுத்து, தான் இனிமேல் அந்தப் பெண்ணை சந்திக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறார் சந்தோஷ்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சந்தோஷ் தனது உறவுக்கார பெண்ணுடன் தன்னுடைய வீட்டில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். வெளியே சென்றிருந்த கோமதி, வீட்டுக்கு வந்தபோது அவர்கள் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து கணவன், மனைவியிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இனியும் கணவருடன் வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்த கோமதி, புதன்கிழமை (நவ. 24) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். கோமதியின் சடலம், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குள் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டிருப்பதால் இதுகுறித்து உதவி ஆணையர் நாகராஜன் நேரடியாக விசாரணை நடத்திவருகிறார். மேலும், சேலம் வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரித்துவருகிறார்.