
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள ஜங்ஷன் பகுதி. அப்படிப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில் நேற்று (01.08.2021) காலை வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் தலை முடியைப் பிடித்து அடித்து, அவரது கன்னத்தில் அறைந்து சரமாரியாக தாக்கித் தரதரவென இழுத்துச் சென்றதோடு அவர் கழுத்தில் இருந்த தாலியைப் பறித்துள்ளார். நடுரோட்டில் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் போலீசார், பெண்ணைத் தாக்கிய அந்த வாலிபரைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர், பெண் போலீசார் தடுத்தும் அதையும் மீறி அந்தப் பெண்ணைக் தாக்கினார். அப்போதுகூட அந்தப் பெண் அவருக்கு ஆதரவாக பேசி,அவர் மீது யாரும் கை வைக்க வேண்டாம், அடிக்க வேண்டாம் என்று போலீசாரிடம் கெஞ்சினார். இதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் அந்தப் பெண்ணும் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வாலிபரைத் தேடிச் சென்றார். அவர்கள் யார், பேருந்து நிலைய வளாகத்தில் அநாகரிகமான முறையில் அந்தப் பெண்ணைத் துன்புறுத்த காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதும், தங்கள் உறவினர் ஊருக்குச் செல்லும்போது கணவன் - மனைவி இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையில் ஏதோ முரண்பாடு ஏற்பட்டதால் கோபமடைந்த கணவர் மனைவியைத் தாக்கி தாலியைப் பறித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் தன்னை போலீஸும் பொதுமக்களும் தாக்கிவிடுவார்களோ என்று அந்தப் பெண்ணின் கணவர் தப்பி ஓடிவிட்டார். கணவனை விட்டால் வேறு வழியில்லை என்று அவரைத் தேடி அந்தப் பெண்ணும் விரைந்து சென்ற இந்த சம்பவம்பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தும் கணவன் - மனைவி என்பதால், அவர்களை ஒரு அளவுக்கு மேல் கண்டிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று பெண் போலீசார் திகைத்து திரும்பி சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us