சேலம் அருகே, கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் உள்ள தவறான தொடர்பால் விரக்தி அடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் மாங்குப்பை அருகே உள்ள பழையூர் சத்திரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர், தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரோகிணி (27). இவர்களுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 15ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு ஐயம்பெருமாள்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிரகாஷ் சென்று விட்டார். மனைவியின் கோபம் தணிந்திருக்கும் என்று கருதிய அவர், மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டில் ரோகிணி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கருப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடற்கூராய்வுக்காக சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால், இந்த சம்பவம் குறித்து சேலம் கோட்டாட்சியர், காவல்துறை உதவி ஆணையர் ஆகியோர் நேரடியாக விசாரித்தனர்.
பிரகாஷின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அங்கிருந்து ரோகிணி எழுதி வைத்திருந்த நான்கு பக்க கடிதத்தைக் கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கான காரணங்களாக சில சம்பவங்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
திருமணத்தின்போது தனக்கு பெற்றோர் வழங்கிய நகைகளை தனது மாமியார் வாங்கிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்றும், இது தொடர்பாக அவரிடம் கேட்கும்போதெல்லாம் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அனைத்தும் என் தந்தைக்கும் தெரியும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில், ரோகிணியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரகாஷை காவல்துறையினர் கைது செய்தனர். வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா? ரோகிணியின் தற்கொலைக்கு வேறு யார் யார் காரணம்? உண்மையில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்ற கடிதத்தில் உள்ளது ரோகிணியின் கையெழுத்துதானா? என்பது குறித்து அறிய, அறிவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.