Advertisment

குடும்பத் தகராறால் விரக்தி; மனைவியைத் தொடர்ந்து கணவனும் ஒரே கிணற்றில் குதித்து தற்கொலை!

Husband and wife passes away in same time near salem

Advertisment

சேலத்தில், கணவருடன் ஏற்பட்ட தகராற்றால் விரக்தி அடைந்த மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் அதே கிணற்றில் கணவனும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி (35). இவருடைய மனைவி சீதா (33). இவர்களுக்குத்திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத்தம்பதிக்கு 14 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமென்ட் கல் தயாரிக்கும் ஆலையில் கூலி வேலை செய்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆக. 3 ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற தம்பதியினர், மாலையில் வீடு திரும்பினர். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய சீதா, ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் குதித்தார்.

Advertisment

மனைவி கோபமாக வெளியேறியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன், அவரைப் பின்தொடர்ந்து சென்றார். மனைவி கிணற்றில் குதித்ததைப் பார்த்ததும் கணவனும் அதே கிணற்றில் குதித்தார். மகளும் அவர்களைப் பின்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார். பெற்றோர் இருவரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு உயிருக்குப் போராடுவதைப் பார்த்த மகள், கத்தி கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்பதற்குள் இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து சூரமங்கலம் காவல்நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி, இருவரின் சடலங்களையும் மீட்டனர். காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கணவன், மனைவி இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஒன்றாக அமர்ந்து அடிக்கடி மது குடிப்பார்களாம். அப்போது அவர்களுக்குள்அடிக்கடி தகராறு ஏற்படும். சம்பவத்தன்றும் அதேபோல மது குடித்தபோது தகராறு ஏற்பட்டதால், விரக்தி அடைந்த சீதா, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவரும் அதே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதும் தெரிய வந்தது.

கணவன், மனைவி அடுத்தடுத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போடிநாயக்கன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe