Husband and wife passes away in cuddalore

Advertisment

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(45). இவருக்கு திருமணமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவரது கணவர் அண்ணாதுரை 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஜோதிலட்சுமி சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக இவரது பிள்ளைகள் இவரை ஒதுக்கி வைத்ததால் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள பெரிய கண்ணாடி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (40) என்பவர் பூங்குணம் கிராமத்திற்கு கொத்தனார் வேலைக்கு வந்த போது ஜோதிலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவரும் கணவன், மனைவியாகவே வாழ்ந்து வந்தனர். ஜோதிலட்சுமிக்கு உடல்நிலை அதிகமாக பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற முடியாததால், நேற்று வீட்டில் விஷமருந்து அருந்தி மயங்கிய நிலையில் கிடந்தார். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய தண்டபாணி, ஜோதிலட்சுமி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஜோதிலட்சுமி விஷம் குடித்தது தெரியவந்தது. அதையடுத்து அருகில் மீதி இருந்த விஷத்தை எடுத்து தண்டபாணியும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரும் வெளியில் வந்து தெருவோரம் மயங்கி விழுந்தார்.

Advertisment

தண்டபாணி மயங்கி கிடந்ததை பார்த்த மீட்க முயன்ற அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டதுடன் வீட்டினுள் மயங்கி கிடந்த ஜோதிலட்சுமியையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தண்டபாணி போகும் வழியிலே இறந்துவிட்டார். மருத்துவமனை சென்ற சிறிது நேரத்தில் ஜோதிலட்சுமி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீசார் தண்டபாணி உடல் மற்றும் ஜோதிலட்சுமி உடலையும் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இருவரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.