/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ambulance-in_6.jpg)
நாமக்கல் அருகே, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக பலியாயினர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பழையபாளையம் கோம்பையைச் சேர்ந்தவர் சிவபாரதி. இவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தை, கொல்லிமலை திண்ணனூர் நாடு பெரிய சோளக்கண்ணிப்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (47) என்பவர் குத்தகைக்கு எடுத்து இருந்தார். அந்த தோட்டத்தில் தனது மனைவி செல்வி (42), மகன் யஷ்வந்த் (6) ஆகியோருடன் தங்கியிருந்து விவசாயப் பணிகளைச் செய்து வந்தார்.
இந்நிலையில், மே 28 ஆம் தேதி மாலைவழக்கம்போல் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்குச் சென்றார் மனோகரன். அவர் மின் மோட்டார் பொத்தானை அமுக்கியபோது, திடீரென்று உடலில் மின்சாரம் பாய்ந்ததில்அலறினார். சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அவருடைய மனைவி கணவரைப் பிடித்து இழுத்தபோது அவருடைய உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டுநிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய், தந்தை இருவரும் இறந்து கிடந்ததைப் பார்த்து சிறுவன் யஷ்வந்த் கத்திக் கூச்சலிட்டான். அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் இதுகுறித்து சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)