சென்னை சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிபவர் வைரமுத்து. இவர் தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு அமலா புஷ்பம் என்ற மனைவி உள்ளார். காவலர் வைரமுத்துவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பின்பு குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கணவன், மனைவியும் ஆலோசனையில் இறங்கியுள்ளனர். அப்போது மனைவி தான் நினைத்த பெயரை குழந்தைக்கு வைக்கலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. வைரமுத்துவும் தான் நினைத்த பெயரை வைக்கலாம் என்று நினைத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வைரமுத்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

Advertisment

incident

incident

இந்நிலையில் நேற்று முன்தினம் பணிமுடிந்து வீடு திரும்பிய வைரமுத்து அறையில் சென்று உள்பக்கமாக கதவை அடைத்து கொண்டார் . நீண்ட நேரமாகியும் வைரமுத்து கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காவலர் வைரமுத்து தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைக்கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வைரமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.