Skip to main content

கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் தர்ணா! கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

husband and wife issue cuddalore district

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் முத்தையா(28) என்பவருக்கும், இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் ஆர்த்தி(22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஆர்த்தியின் பெற்றோர் பல லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். 

 
இதனிடையே ஆர்த்தியின் நகைகளையும், ரொக்கப்பணம் பத்து லட்ச ரூபாயையும் முத்தையா, ஆர்த்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஆர்த்தி தான் சட்டக்கல்வி படிப்பதற்குப் பணம் தேவைப்படுவதால், அந்தப் பணத்தைத் தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடைபெற்றுள்ளது. 
 

இந்த நிலையில், 7 மாத கர்ப்பிணியான ஆர்த்தி, தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காகச் சென்று, அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகின்றது. இதுவரை கணவரும், கணவரின் வீட்டாரும் ஆர்த்தி மற்றும் குழந்தையைப் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஆர்த்தி, நேற்று புலிவலம் கிராமத்தில் உள்ள தனது கணவர் முத்தையா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனது மாமியாரிடம் 'தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கேட்டதற்கு, அவரது மாமியார், முத்தையா வீட்டில் இல்லை. அவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார்' எனக் கூறியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 

இதனால் மனமுடைந்த ஆர்த்தி தனது கணவர் வீட்டின் முன் தான் வைத்திருந்த சாவியால் கழுத்தையும்,  இடது கையையும் அறுத்துக்கொண்டு வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

 

cnc

 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திட்டக்குடி காவல்துறையினர் அவரிடம்  சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 
இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழுத்தை அறுத்துக் கொண்டு இளம்பெண் ஒருவர் கணவன் வீட்டின் முன்பு தர்ணா செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.