
பல்லாவரம் அருகே, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்பட்ட மனைவி, மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டு, அந்தப் பெண்ணின் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூர் - கமிஷனர் காலனியைச் சேர்ந்தவர் அலாவுதீன். இவருடைய மனைவி கடந்த சில நாட்களாக கணவர் அலாவுதீன் மீது சந்தேகம் ஏற்பட்டு, சண்டை போட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, டியூசனில் இருந்த மகனை அழைத்து வருவதற்காகச் சென்ற சுனிதா வீடு திரும்பிய போது, அலாவுதீன் தூக்கில் பிணமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடலைக் கைப்பற்றி, போஸ்ட்-மார்ட்டம் நடந்துள்ளது. பிறகு, உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கும் முடிந்தது.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட அலாவுதீனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அலாவுதீன் தற்கொலை செய்வதற்கு முன், தனது செல்போனில், தன் சாவுக்குக் காரணம் யார் என்று குறிப்பிட்டுப் பேசிய வீடியோ இருந்துள்ளது. அதில் “14 ஆண்டுகளாகப் பணிபுரிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், அதே மருத்துவமனையில் பணி செய்யும் பெண் ஒருவருடன் என்னை தொடர்புபடுத்திப் பேசியதோடு, என் மனைவி மூலமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைத்தனர். என்னை விசாரித்த காவல்துறை ஆய்வாளர் தரக்குறைவாகப் பேசினார். என்னுடன் பணியாற்றிய பெண்ணையும், என்னையும் அவமானப்படுத்தினார்கள். மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் பிரவுன்தாஸ் மற்றும் சக பெண் ஊழியர்கள்தான் என் சாவுக்குக் காரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.