/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alaga434.jpg)
சேலத்தில், தன்னை வாடி, போடி என்று பேசக்கூடாது என்றதால், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அழகாபுரம் ஏடிசி நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 37). இவர், சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி திவ்யா. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், புதன்கிழமை (ஜூலை 6) மனைவியை வாடி, போடி என்று கூறியுள்ளார். ஆனால் திவ்யா, தன்னை 'டி' போட்டு பேசக்கூடாது என்று கூறி, தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த திவ்யா, இதுகுறித்து பஞ்சாயத்து பேசுவதற்காக கோரிமேட்டில் வசித்து வரும் தனது கணவரின் பெற்றோருக்கு செல்போனில் தகவல் கொடுத்து உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் வினோத்குமாரோ, இதையெல்லாம் ஏன் அவர்களுக்கு தெரியப்படுத்தி, விஷயத்தை பெரிது படுத்துகிறாய்? எனக்கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் அதை திவ்யா கண்டுகொள்ளவில்லை.இதனால் விரக்தி அடைந்த வினோத்குமார், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
பதற்றம் அடைந்த திவ்யா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே வினோத்குமார் உயிரிழந்தார். அழகாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)