HUSBAND AND WIFE INCIDENT POLICE INVESTIGATION

Advertisment

தூத்துக்குடி மாவட்டத்தின் சாயர்புரம் சமீபமாக உள்ள சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 43) கூலித் தொழிலாளி. இவரது மனைவி பண்ணைவிளை புதூரைச் சேர்ந்த சந்திரமதி (வயது 35) தம்பதியருக்குத் திருமணமாகி 13 வருடங்களாகின்றன. இவர்களுக்கு தங்கசிவன் (வயது 12) என்ற மகனும் பார்வதி (வயது 7) என்ற மகளும் உள்ளனர். ஆரம்பத்தில் சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் திடீரென புயலடித்திருக்கிறது.

கணவர் பொன்ராஜிடம் மனைவி அடிக்கடி சண்டையிட்டுத் தகராறு செய்து வந்திருக்கிறார். தொடர்ந்து மனைவி இப்படி கணவனுடன் சண்டையிட்டு வருவதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்டதால் தான் சந்திரமதி கணவனுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

நேற்று முன்தினம் (19/06/2022) மாலை நேரத்திற்குப் பிறகும் கணவரிடம் சந்திரமதி தகராறு செய்து சண்டை போட்டிருக்கிறார். அது சமயம் திடீரென ரௌத்திரமான சந்திரமதி, வீட்டிலிருந்த குத்துவிளக்கால் கணவர் பொன்ராஜின் தலை, கழுத்து, மூக்கில் கடுமையாக தாக்கியவர், நெஞ்சில் குத்தியிருக்கிறார்.

Advertisment

படுகாயத்துடன் பொன்ராஜ் அலறிய சத்தம் கேட்டு பதறியடித்து வந்த உறவினர்கள் அவரைமீட்டு ஆம்புலன்சின் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றிப் போகவே நேற்றிரவு (20/06/2022 பொன்ராஜ் மரணமடைந்திருக்கிறார்.

சம்பவம் தொடர்பாக அவரது அண்ணன் பாஸ்கர் கொடுத்த புகாரினடிப்படையில் சாயர்புரம் எஸ்.ஐ. முனியசாமி வழக்குப் பதிவு செய்தார். அதனையடுத்து சம்பவ இடத்தை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் காவல்துறையினர் பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டவர்கள் மனைவி சந்திரமதியைக் கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சையை மேற்கொள்ளும் பொருட்டு பெண் போலீசார் மூலம் அனுப்பி வைத்தனர்.

கணவனைக் குத்துவிளக்கால் மனைவியே கொடூரமாக குத்திக் கொலை சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தை உறைய வைத்திருக்கிறது.