husband and wife fight incident salem police investigation

சேலத்தில், மது குடிப்பதைக் கண்டித்த மனைவியை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

சேலம் தாதகாப்பட்டி வேலு நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 42). சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகைசெல்வி (35). இவர், வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு பாலசத்யா (வயது 10) என்ற மகள் இருக்கிறாள்.

Advertisment

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக். 11) தேதி இரவு அனைவரும் வழக்கம்போல இரவு உணவை முடித்துவிட்டு தூங்கச் சென்றனர். புதன்கிழமை (அக். 12) அதிகாலை 03.00 மணியளவில், சிறுமி பாலசத்யா தூக்கம் கலைந்து எழுந்துள்ளாள். அப்போது படுக்கையில் தனது தாயார், முகத்தில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார்.

தாயார் மூச்சுப் பேச்சின்றி அசைவற்றுக் கிடந்ததைப் பார்த்து சிறுமி அதிர்ச்சி அடைந்தாள். தந்தையும் வீட்டில் இல்லை. கதவு திறந்த நிலையில் இருந்தது. இதையடுத்து கீழ் தளத்தில் வசித்து வரும் சித்தப்பா நாகராஜனை எழுப்பி, தாய் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கூறினாள்.

Advertisment

நாகராஜன் மேல் தளத்தில் சென்று பார்த்தபோது, அங்கே கார்த்திகைசெல்வி உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

காவல்துறையினர் நிகழ்விடம்விரைந்தனர். கார்த்திகை செல்வியின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜசேகரனுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதை அவருடைய மனைவி கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த ராஜசேகரன் மனைவியை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நிகழ்விடத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த இரும்பு கம்பியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ராஜசேகரனின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது. தலைமறைவாகிவிட்ட அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் சம்பவத்தன்று என்ன நடந்தது? கொலைக்கான முழு பின்னணியும் தெரிய வரும் என்கிறார்கள் காவல்துறையினர்.