Advertisment

"ஸ்கூல்ல இருந்து கிளம்பிட்டாரு, நீ ரெடியா இரு''... நண்பனுக்குத் துரோகம் செய்த நண்பன்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

incident

Advertisment

புதிய குற்றங்கள் இந்தக் கரோனா காலத்தில் குறைந்திருப்பதால் பழைய குற்றவாளிகளைத் தேடிப் பிடிக்கறார்கள் கடலூர், புதுச்சேரி காவல்துறையினர். இதில் அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால், நண்பர்களின் வீட்டுக்கு வந்து பழகி, நண்பர்களின் மனைவியுடன் நெருங்கி, பின்னர் இடையூறு என்று நண்பர்களையே போட்டுதள்ளிய கொடூரமும் அம்பலப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூரை அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி(41), ஐ.டி.ஐ. மெக்கானிக் படித்த இவர் தொண்டமா நத்தம் அரசு உதவிபெறும் பள்ளியில் தற்காலிக பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (29)க்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கந்தசாமி கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி இரவு தொண்டமாநத்தம் பகுதியில் வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு தனது பேஷன் புரோ என்ற இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, பின்னால் வந்த இண்டிகா கார் மோதி, பலத்த காயமடைந்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்., சிகிச்சை பலனின்றி மார்ச் மாதம் 17 ஆம் தேதி கந்தசாமி உயிரிழந்தார். இது குறித்து புதுச்சேரி வில்லியனூர் மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கந்தசாமியின் தாயார் அலமேலு, ‘தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது. தனது மருமகள் திட்டமிட்டு காரை ஏற்றிகொலை செய்திருக்கலாம்’ என வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் புகாரை பெற்று விசாரித்தனர். விபத்து நடந்த பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில் கந்தசாமி ஓட்டி வந்த பைக் மீது கார் வேண்டுமென்றே மோதியது தெரியவந்தது. அதையடுத்து விபத்து வழக்கு போக்குவரத்துக் காவல் நிலையத்திலிருந்து சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்குக் கொலை வழக்காக மாற்றப்பட்டது. காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டு, தலைமறைவாக இருந்த லிங்காரெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த பிரவீன்குமார்(27) என்பவரைப் பிடித்து போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்தனர். காட்டேரிக்குப்பத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்கிற அஜித்குமார் சொல்லியே வாடகை கார் மூலம் கந்தசாமி மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதாக பிரவீண்குமார் கூறியுள்ளார்.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, கந்தசாமியும், காட்டேரிக்குப்பத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்கிற அஜித்குமாரும் ஓட்டுநர்கள் என்பதால் நண்பர்களாகி, வீட்டுக்குச் செல்லும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதரனுக்கும், கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது கந்தசாமிக்குத் தெரிய வந்து மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து தங்களது சந்தோஷத்துக்கு இடையூறாக இருந்த கந்தசாமியைக் கொலை செய்ய புவனேஸ்வரியும், ஸ்ரீதரனும் திட்டம் தீட்டி, விபத்து போல ஜோடிக்க நண்பர் பிரவீன்குமார் உதவியுடன் காரை ஏற்றி கந்தசாமியைக் கொலை செய்துள்ளனர். கொலையான கந்தசாமியின் தாயார் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்ததுடன் கந்தசாமி வாட்ஸ்அப் மூலம் பேசிய ஆடியோக்களையும் சி.டி. போட்டு கொடுத்தார்.

Advertisment

அதன்பிறகு கந்தசாமியின் மொபைல் போனை ஆய்வு செய்தததில் கந்தசாமிக்கும், புவனேஸ்வரிக்கும் நடந்த வாக்குவாதங்கள் வீடியோ காட்சிகள் இருந்தன. சந்தேகம் மேலும் அதிகரிக்கவே பிரவீன்குமாரை பிடித்து விசாரித்ததில் அவனுடைய நண்பன் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டதால் காரை ஏற்றி கொன்றதை ஒப்புக்கொண்டான். ஸ்ரீதரை பிடித்து விசாரித்ததில், "அடிக்கடி கந்தசாமி வீட்டுக்கு சென்றதால் புவனேஸ்வரியுடன் தொடர்பு ஏற்பட்டது. சில நாட்களில் கந்தசாமிக்குத் தெரிந்து அவர்கள் வீட்டில் பிரச்சினைகள் எற்பட்டது. கந்தசாமியைக் காலி செய்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும்னு புவனேஸ்வரி சொல்லியுள்ளார். அதனால் ஆக்ஸிடென்ட் மாதிரி செட்அப் செய்து கொன்றோம். அன்றைக்கு, "கந்தசாமி ஸ்கூல்ல இருந்து கிளம்பிட்டாரு, நீ ரெடியா இரு''ன்னு புவனேஸ்வரி போனில் கூறியது. அதுக்கப்புறம்தான் காரை ஏற்றினோம்''னு சொன்னான். அதையடுத்து புவனேஸ்வரிமற்றும்அவரோடு தகாத உறவில் இருந்த அஜீத்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தோம்''’என்றனர்.

இதுகுறித்து கொலை செய்யப்பட்ட கந்தசாமியின் உறவினர் சக்திவேல் நம்மிடம், "கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக தாயாரிடம் வீட்டுப் பிரச்சினைகள் குறித்து செல்போனில் பேசிய கந்தசாமி, "அம்மா… நான் இதுக்கப்புறம் எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு தெரியல. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு அவ(புவனா), அவ அம்மா, அவ அண்ணன், அந்தப் பையன்(ஸ்ரீதர்) அவங்க தான் காரணம்'' எனச்சொல்லிருக்கார். அதை வச்சிதான் அந்த போன் ஆடியோவோட கம்ப்ளைன்ட் கொடுத்தோம். கரோனாவால தாமதமானது விசாரணை. இப்ப சிக்கிட்டாங்க''என்றார்.

இதேபோல கடலூர் மாவட்டத்தில் தகாத உறவுக்காகக் காதலித்து திருமணம் செய்த கணவனை கொன்ற மனைவியும், அவரது கள்ளக்காதலனும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கடலூர் மாவட்ட காவல்துறையில் விசாரித்த போது... கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள மேற்கிருப்பு கிராமத்திலுள்ள செல்வராசு என்பவரின் முந்திரி தோப்பில் கடந்த 13.07.2019 அன்று அடையாளம் தெரியாத சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக ஊமங்கலம் காவல்துறைக்குத் தகவல் வர, அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்ஸ்ரீ உத்தரவின் பேரில், நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர் கடந்த ஒன்பது மாதங்களாக காணாமல் போனவர்களின் விவரங்களைச் சேகரித்து விசாரித்ததில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் மேற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுதா(34) என்பவர் ‘தனது கணவர் ஸ்ரீதரை(39) காணவில்லை’ எனப் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகார் குறித்து ரகசியமாக விசாரித்ததில் ஸ்ரீதரன் மனைவி சுதா, அதே பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருக்குக் கடந்த 6 மாதத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட முறை தொலைபேசி வாயிலாக அழைத்திருப்பது தெரிய வந்தது.

incident

அதையடுத்து சுதாவை அழைத்து விசாரித்தோம். சந்தேகம் அதிகமானது. விசாரணை தீவிரமானது.

"நானும் மேற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் ஸ்ரீதரனும் 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். 2 மகன்கள் உள்ளனர். ஸ்ரீதரன் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேருந்துகளின் பொறுப்பாளராக இருந்தார். அதனால் அவர் பணிபுரியும் இடத்திலேயே வாரத்தில் 5 நாட்கள் தங்கிக்கொண்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டிற்கு வருவார். அவ்வாறு வீட்டுக்கு வரும் போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவராஜ்(23) என்பவரையும் உதவிக்காக அவ்வப்போது அழைத்து வருவார். குடும்ப நண்பரான சிவராஜிற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீதரன் வேலைக்காக பெரம்பலூர் சென்றதும், நாங்கள் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தோம். அதுபற்றி அக்கம் பக்கத்தினர் எனது கணவரிடம் கூறினர். ஆனால் எனது கணவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையில் சந்தேகப் படவில்லை.

http://onelink.to/nknapp

இந்நிலையில் கடந்த 12.7.2019 அன்று அதிகாலை ஸ்ரீதரன் பெரம்பலூரில் இருந்து திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது நானும் சிவராஜூம் ஒன்றாக இருந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சியாகி, எங்களிடம் சண்டை போட்டார். அதில் ஆத்திரமடைந்த நானும் சிவராஜூம் அவரை அடித்துக் கொன்ற பின்பு அவரது உடலை வீட்டில் வைத்திருந்தோம். அன்று இரவு என் தங்கையின் காரில் ஸ்ரீதரன் உடலை தூக்கிச் சென்று விருத்தாசலம் அருகே மேற்கிருப்பு கிராமத்திலுள்ள முந்திரி தோப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தோம். யாரும் சந்தேகப்படாமல் இருப்பதற்காக கொலை செய்யப்பட்டு பத்து நாட்களுக்கு பின்பு (22.7.2019) திருப்பா திரிப்புலியூர் காவல் நிலையத்திற்குச் சென்று, எனது கணவரைக் காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் எனப் புகார் கொடுத்தேன். ஆனால் அந்தப் புகாராலேயே மாட்டிக்கொண்டோம்என்றார். சிவராஜூம் இதனை ஒப்புக்கொண்டான். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

உயிர் கொடுக்கும் தோழர்கள் கதைகள் பலவற்றைக் கேள்விபட்டுள்ளோம், படித்துள்ளோம். ஆனால் இந்த நண்பர்களோ பழகிய கத்தியிலேயே ‘பதம்’ பார்த்து உயிர் எடுக்கும் துரோகிகளாகியுள்ளனர்.

-சுந்தரபாண்டியன்

Investigation incident issues family problem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe